News

மதுவுடன் மரணத்தை தழுவிய நபர் – தப்பிச்சென்ற நண்பர்கள் #புத்தளம் – கலாஓயா

புத்தளம் – வில்பத்து தேசிய சரணாலயத்திற்கு முன்னால் உள்ள கலா ஓயா ஆற்றிற்கு குளிக்கச் சென்ற நபர் ஒருவர் நேற்று (30) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் உட்பட நால்வர் குளிப்பதற்கு கலா ஓயா ஆற்றிற்கு சென்றிருந்த நிலையில், அவர்கள் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்ததாக விசரணையில் தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது,  அங்கு இரண்டு குழுக்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, சடலமாக மீட்கப்பட்டவர் தவிர்ந்த ஏனையவர்கள் அவ்விடத்தை விட்டு தப்பிச் சென்ற நிலையில், இரண்டு மணித்தியாலங்களின் பின்னர், தப்பிச் சென்ற குழுவினர், சடலமாக மீட்கப்பட்டவரைத் தேடி மீண்டும் கலா ஓயா ஆற்றிற்கு வருகைத் தந்துள்ளனர்.

இது தொடர்பில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் வண்ணாத்தவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், நேற்று (30)  பொலிஸார் மற்றும் உயிரிழந்தவரின் நண்பர்களும் கலா ஓயாவின் இருபுறமும் தேடியுள்ளனர். இதன்போது கலா ஓயா ஆற்றில் காணாமல் போன நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வந்தனாகம, கலங்குட்டிய, கல்நேவ பகுதியைச் சேர்ந்த எச்.எம்.  வசந்த பிரியதர்ஷன (வயது 47) திருமணமாகாதவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் எழுவாங்குளம் பகுதியில் உள்ள சுற்றுலா பங்களாவை திருத்துவதற்காக வருகைத் தந்ததாகவும், அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த புத்தளம் மாவட்ட பதில் நீதவான் வசீம் ராஜா, சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு சடலத்தைக் கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த   சடலம் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வண்ணாத்தவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button