குரங்குகளை விரட்ட சிறுத்தைகளின் சிறுநீரை பயன்படுத்தும் யோசனையின் விளக்கம் என்ன? இது எவ்வளவு சாத்தியம் ஆகும்? விளக்குகிறார் Dr. ஷியான் யாக்கூப்

குரங்குகளை விரட்ட சிறுத்தைகளின் சிறுநீரை பயன்படுத்தப் போகிறார்கள் என்றவுடன் பலர் இனி சிறுத்தைகள் நிம்மதியாக சிறுநீர் கூட கழிக்க முடியாது போல என்று ஆதங்கப்படுகிறார்கள். கோமியம் சேகரிப்பது போல இனி சிறுத்தை வளர்த்து அதன் சிறுநீரை சேகரிப்பதெல்லாம் எந்தளவுக்கு சாத்தியம் என்கிறார்கள்.
உண்மை என்னவென்றால் பயன்படுத்தப்படப் போவது சிறுத்தைகளின் சிறுநீர் அல்ல, அதன் வாசனை மட்டுமே. ரோஸ் வாசமென்று நம்பி நாம் எப்படி ரூம் ஸ்ப்ரே அடித்து முகர்ந்து கொண்டு திரிகிறோமோ, நல்ல சந்தன வாசனை என்று சொல்லி மணக்குச்சிகளை எரிக்கிறோமோ, சொக்கலேட், மாங்காய் என்று நம்பி எப்படி ஐஸ்கிரீம், ஜுஸ் என்பவற்றை உண்கிறோமோ அது போல் சிறுத்தை என்று நம்பி குரங்குகள் ஓடிவிடும் என்பதுதான் இதன் பின்னாலுள்ள லொஜிக்.
குறித்த வாசனை திரவியத்தை சந்தைப்படுத்துவதற்கென்றே உலகில் ஏராளமான நிறுவனங்கள் இருக்கின்றன. தோட்டங்களில், வயல்களில் எல்லாம் பறவைகளை துரத்த எப்படி விரட்டி வைக்கப்படுகிறதோ அது போல குரங்குகளை துரத்த இந்த வாசனை பாவிக்கப்படப் போகின்றது.
இந்த வாசனை திரவியத்தில் நனைத்து எடுத்த ஒரு துணியை தோட்டத்திலோ/ வயலிலோ வைத்தாலே அது குரங்குகளை விரட்டுவதற்கு போதுமானதாம். அதிகளவு மோப்ப சக்தி கொண்ட குரங்குகள் வெகு தூரத்தில் இருந்தே இதனை மோப்பம் பிடித்து விலகி விடுமாம். ஆனால் இந்த பயத்தை குரங்குகளில் நீடிக்க வேண்டுமென்றால் இன்னும் சில விடயங்களை செய்ய வேண்டுமாம்.
அதிலொன்று பங்களாதேஷ் பேன்ஸை பயன்படுத்தல். அதாவது பிளாஸ்டிக் சிறுத்தைகளை. இல்லையென்றால் சிறுத்தைகளின் சத்தங்களை ஒலிக்கவிடுதல். இவற்றை கொண்டு குரங்குகளில் படையெடுப்பை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர்.
ஆனாலும் இது ஒரு நிரந்தரமான தீர்வுத் திட்டமொன்றல்ல. இருந்தாலும் இது ஒரு மட்டமான தீர்வும் அல்ல. இதனால் இயலுமான வரைக்கும் குரங்குகளின் பயணப்பாதைகளை மாற்றி சேதத்தினை குறைக்க முடியும். குரங்குகளின் குடித்தொகையை கட்டுப்படுத்துவது/ குரங்குகளில் நடத்தை மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் இலங்கை போன்ற ஒரு நாட்டுக்கான நிரந்தர தீர்வாக இருக்கும்.
ஆண்மை நீக்கம் மூலம் குடித்தொகையை கட்டுப்படுத்தலாம். நடத்தை மாற்றத்தை ஏற்படுத்துவதென்றால்?
இதன் அர்த்தம் குரங்குகளை உட்கார வைத்து விஞ்ஞான வகுப்பு எடுப்பதல்ல. காடுகளில் அதிகளவில் கனிகளை தரக்கூடிய மரங்களை வளர்த்து குரங்குகளுக்கு தேவையான உணவு கிடைப்பதை உறுதிசெய்து அந்த காடுகளை பாதுகாத்தல். இதன் மூலம் குரங்குகள் உணவுக்காக தோட்டங்களுக்கும், வீடுகளுக்கும் படையெடுப்பதை குறைத்து அவற்றின் நடத்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
அரசாங்கம் தனித்தீவில் குரங்குகளை அடைப்பதை பற்றியும் யோசனை முன்வைத்தது. அது எந்தளவு சாத்தியம் என்பது தெரியவில்லை. அவற்றை பிடிப்பதற்கும், இடமாற்றவும் அதிகளவு செலவு செய்ய வேண்டிய தேவை ஏற்படுவதோடு, அவற்றுக்கு தொடர்ச்சியாக உணவளிக்க வேண்டிய தேவையும் ஏற்படும்.
இதனால் அவற்றின் நடத்தையில் எதிர்மாறான மாற்றங்களே ஏற்படும் என்பது எனது அனுமானம். இதற்கும் மேலே சிந்திக்க வேண்டிய விடயம் அத்தீவில் ஏதேனும் தொற்று நோய்கள் பரவ ஆரம்பித்தால் அத்தனை குரங்குகளும் பரிதாபமாக உயிரிழக்கும்.
இந்த சிறுத்தையின் சிறுநீர் வாசம் தூர நோக்கத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு நல்ல முன்னெடுப்புதான். விளைவுகளை பொறுத்திருந்து பார்ப்போம்.
#ஷியான்_யாக்கூப்

