மதுபோதையில் பேருந்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற சாரதிக்கு, இனிமேல் வாழ்க்கையில் வாகனமே ஓட்ட முடியாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது

மதுபோதையில் தனியார் பேருந்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற சாரதியின் சாரதி அனுமதிப்பத்திரத்தை வாழ்நாள் முழுவதும் ரத்து செய்ய வேண்டும் என பாணந்துறை பிரதான நீதவான் இன்று உத்தரவு பிறப்பித்தார்.
கூடுதலாக, 40,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
வேதநாயகம் எட்வின் நிமல் என்ற பேருந்து சாரதிக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டது.
தனியார் நிறுவன ஊழியர்கள் குழுவை ஏற்றிக்கொண்டு பாணந்துறையிலிருந்து களுத்துறை நோக்கிப் பயணித்த பேருந்து, பாணந்துறை நல்லுருவப் பகுதியில் நிறுத்தப்பட்டு, சோதனை செய்யப்பட்டது.
இதன்போது, சாரதியிடம் இருந்து மது வாசனை வந்த நிலையில், பொலிஸார் அவரைக் காவலில் எடுத்து, சோதனை செய்தனர்.
இதில், குறித்த நபர் மது அருந்தியிருந்ததை பொலிஸார் உறுதிப்படுத்தி, நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி, பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவித்ததற்காக அவரை கடுமையாக எச்சரித்த பின்னர் இந்த தண்டனையை நீதவான் விதித்தார்.

