எப்போதும் போல் இம்முறையும் வெல்லப்போவது நாங்கள் தான் ; விமல் வீரவன்ச
‘‘ஒரு காலத்தில் மஹிந்தவை தந்தையென்று கூறிக்கொண்டு அரசியல் மேடைகளில் உரிமையுடன் புகழ்பாராட்டிய பலர், அவரை முழுமையாக தனிமையாக்கி விட்டு கட்சி தாவி விட்டார்கள். தேர்தல் காலம் ஆரம்பித்து விட்டதால் கட்சித் தாவல்களுக்கு குறையிருக்காது. எனவே, இது பாராளுமன்ற வாரம் என்பதால், தேர்தலை இலக்கு வைத்து மேலும் சில கட்சித் தாவல்களை பார்க்கக்கூடியதாக இருக்குமென சர்வஜன அதிகார அரசியல் கூட்டணியின் சிரேஷ்ட உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருமான விமல் வீரவங்ச தெரிவித்தார்.
சர்வஜன அதிகார கூட்டணியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (05) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில்,
எத்தனை வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டாலும் இன்று நாட்டிலிருக்கும் தீர்மானமிக்க சவால்களுடனான பிரச்சினைகள் தொடர்பில் சிந்தித்தால், பொதுமக்களுடன் விளையாடுவதற்கு எமக்கு உரிமை இல்லை. எனவே, இந்த ஜனாதிபதித் தேர்தல் தீர்மானமிக்கதாக இருக்கும்.
எங்களின் முதலாவது யோசனையை வெளியிட்டுள்ளோம். இரண்டாவது யோசனையை எதிர்வரும் 11ஆம் திகதி வெளியிடவுள்ளோம். அதுதொடர்பான கருத்தாடல்களின் பின்னர் இறுதி யோசனைகளை சமர்ப்பிக்க எதிர்பார்த்திருக்கிறோம்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டவுடன் மரத்துக்கு மரம் தாவும் சம்பவங்களும் ஆரம்பித்துவிட்டன. மொட்டு தொடர்பில் சிந்தித்து செயற்பட்ட பொதுஜன பெரமுனவுக்கு இன்று என்ன நிலைமை ஏற்பட்டுள்ளது என்பது மக்களுக்கும் தெளிவாக தெரிகிறது. பெசில் ராஜபக்ஷவினால், பொதுஜன பெரமுன தொடர்பில் சிந்தித்து தலைக்கு மேல் தூக்கிவைத்து பாலூட்டி வளர்க்கப்பட்டவர்கள் அந்த நம்பிக்கையை கைவிட்டு ரணில் விக்கிரமசிங்கவின் தரப்புக்கு தாவ ஆரம்பித்துவிட்டார்கள்.
பெசில் பாலூட்டி வளர்த்த ரோஹித அபேகுணவர்தன, சந்திரசேன போன்றார் மறுபக்கம் தாவியுள்ளனர். ஒருகாலத்தில் மஹிந்தவை தந்தையென்று கூறிக்கொண்டு அரசியல் மேடைகளில் உரிமையுடன் புகழ்பாராட்டிய இவர்கள், அவரை முழுமையாக தனிமையாக்கிவிட்டார்கள்.
மஹிந்தவும் இன்னும் 12 பேரே மீதமாகியுள்ளார்கள். அவர்களிலும் ஐவர் ராஜபக்ஷக்கள். அதேபோன்று, ராஜபக்ஷக்களில் ஒருவரும் ரணிலுக்கு ஆதரவளிப்பதற்காக வரவா என்று கேட்கிறார். இருந்தபோதும் நீங்கள் இந்த தரப்புக்கு வந்தால் மீண்டும் ராஜபக்ஷக்களுடன் இணைந்துகொண்டது போல் ஆகிவிடும் என்று ரணில் தரப்பினர் பதில் கூறியிருக்கிறார்கள். அதனால், நடுநிலையாக இருக்குமாறும் அறிவித்திருக்கிறார்கள்.
ராஜபக்ஷக்களுடன் இருக்கும் வரை அரசாங்கத்துடன் இணையப் போவதில்லை என்று ஒருசிலர் கூறியிருந்தார்கள். தற்போது அந்த தடை நீங்கியுள்ளது. அதனால், அடுத்த பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் இந்த வாரங்களில் மேலும் மரங்களுக்கு தாவும் சம்பவங்கள் இடம்பெறவுள்ளன என்பதை அறியக்கூடியதாக இருக்கிறது.
மக்கள் விடுதலை முன்னணியில் இருந்த காலம் முதல் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எங்களின் ஒரு நிலைப்பாட்டுக்காகவே நாங்கள் செயற்பட்டிருக்கிறோம். மற்றையவர்களினூடாக கிடைக்கும் அமைச்சுகளுக்காகவும் சுகபோகங்களுக்காகவும் வாய்ப்புகளுக்காகவும் எங்களின் கொள்கைகளை காட்டிகொடுத்தது இல்லை. எது எவ்வாறாக இருந்தாலும் கடந்த காலங்களை போன்று இந்த தேர்தலிலும் வெற்றியுடனேயே திரும்புவோம் என்றார்.