நாடு முழுதும் குடும்பத்துடன் சுற்றுலா செல்வது என்ற போர்வையில் சூட்சுமமாக ஐஸ் போதைப்பொருள் கடத்தி வந்த இருவர் கைது.

நாட்டின் பல பகுதிகளுக்கு, குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றுலா செல்வதாகத் தெரிவித்து, ஐஸ் ரக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கினிகத்ஹேன – கடவல பகுதியில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 28 ஆயிரத்து 400 மில்லிகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் ஹட்டன் நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மாத்தறை பகுதியைச் சேர்ந்த 31 மற்றும் 44 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் வட்டவலை, ஹட்டன், கொட்டகலை, தலவாக்கலை, நுவரெலியா, வெலிமடை, ஹப்புத்தளை மற்றும் பண்டாரவளை ஆகிய பகுதிகளுக்கு அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சுற்றுலா செல்வதாகக் கூறி போதைப்பொருள் கடத்தலை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

