பங்களாதேஷ் நிலைவரத்தை இலங்கையோடு ஒப்பிட்டு தொடர்ந்தும் கருத்துக்களை முன் வைப்பது ஏன்? அமைச்சர் ஜீவன் கேள்வி
பங்களாதேஷ் நிலைவரத்தை இலங்கையோடு ஒப்பிட்டு தொடர்ந்தும் கருத்துக்களை முன் வைப்பது ஏன்? அதேபோன்று இலங்கையிலும் மீண்டும் நெருக்கடி ஏற்படும் என்றா எதிர்க்கட்சியினர் கூற வருகின்றனர்? தவறான தீர்மானங்கள் மூலமே மீண்டும் நெருக்கடிகளே ஏற்படும் என்பதை நாட்டில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில்செவ்வாய்க்கிழமை (06) இடம்பெற்ற மாத்தறை நில்வலா கங்கை அண்மித்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள உவர்நீர் தடுப்பு காரணமாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்ட அவர் மேலும் பேசுகையில்,
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னைய நிலைமையை பார்க்கும்போது அதிலிருந்து மீள முடியும் என எவரும் நம்பவில்லை. எனினும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை சிறந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளார்.
நாம் அதற்கு முன்பிருந்த பழைய நிலைக்கு வராவிட்டாலும் அதைவிட நல்லதொரு நிலைக்கு வர முடியும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.
உணர்வுகளுக்கு அடிபணியாமல் சிந்தித்து செயல்பட வேண்டும் அதனையே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செய்துள்ளார்.
அன்றைய நிலை தொடர்பில் சிந்தித்து தற்போது நாம் எங்கு உள்ளோம் என்பதை சிந்திக்க வேண்டும்.
பங்களாதேஷ் நிலைமைகள் தொடர்பில் உண்மையில் நாம் கவலை யடைகின்றோம்.அது தொடர்பில் வெளி விவகார அமைச்சர் அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோர் கவனத்தில் எடுத்துள்ளனர். எனினும் அதனை இலங்கையோடு ஒப்பிட்டு தொடர்ந்தும் கருத்துக்களை முன் வைப்பது ஏன்? என நான் கேட்க விரும்புகின்றேன். அதேபோன்று எதிர்க்கட்சியினர் மீண்டும் நெருக்கடி ஏற்படும் என்றா கூற வருகின்றனர்? நாம் நீதியை நிலைநாட்டவே பாடுபடுகின்றோம்.
தவறான தீர்மானங்கள் மூலமே நெருக்கடிகள் ஏற்படும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த இரண்டு வருடங்களோடு ஒப்பிடுகையில் அதன் பின்னரான முன்னேற்றம் மற்றும் நாம் எங்கே உள்ளோம் என்பதை அனைவரும் புரிந்து கொள்வது அவசியம் என்றார்