சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு இதுவரையில் நீதி கிடைக்கவில்லை

இராஜதுரை ஹஷான்
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் பலர் இன்றும் சிறையில் உள்ளார்கள். இரண்டு பிரதான குண்டுதாரிகளின் தந்தையான இப்ராஹிம் வெளியில் உள்ளார்.
இவரது சொத்துக்களை அரசுடமையாக்கி குண்டுத்தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியில் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை அறிவிக்க வேண்டும்.இல்லையேல் வீதிக்கு இறங்கி போராடுவோம் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்தார்.இதன் பின்னர் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் பிரதான சூத்திரதாரியை அறிவிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஏப்ரல் 21 தினத்தன்று ஜனாதிபதி எதனையும் அறிவிக்கவில்லை.மக்களின் கண்களில் மண் தூவப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை பல ஆண்டுகளுக்கு பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சமர்ப்பித்துள்ளார்.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி நானும் சாட்சியமளித்தேன். குறிப்பிட்ட விடயங்களை பொலிஸார் குறிப்பெடுத்தார்கள். சட்டமா அதிபர் திணைக்களம் இந்த சாட்சியங்களை உன்னிப்பாக அவதானித்தது.இவ்வாறான பின்னணியில் இந்த அறிக்கையை மீண்டும் பொலிஸாரிட் ஏன் வழங்க வேண்டும்.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு சாட்சியமளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளர் ரவி செனவிரத்ன ‘ பயங்கரவாதி சஹ்ரானுக்கும், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கும் தொடர்பிருப்பதற்கான சாட்சியங்கள் ஏதும் கிடைக்கவில்லை’என்று குறிப்பிட்டார்.
பயங்கரவாதி சஹ்ரான் உட்பட அவரது சக தாக்குதல்தாரிகளின் தொலைபேசி, மடிக்கணனி மற்றும் இலத்திரனியல் தகவல் பரிமாற்றத்தை ஆராய்ந்த அமெரிக்காவின் எப்.பி.ஐ. நிறுவனம் பயங்கரவாதி சஹ்ரானுக்கும், ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்புக்கும் இடையில் 2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர்பு இருந்துள்ளதாக சத்தியக்கடதாசி ஊடாக அந்நாட்டு நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.
அதேபோல் பயங்கரவாதி சஹ்ரான் சுதந்திர தின நிகழ்விலும், கண்டி தலதா மாளிகை பெரஹராவிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார். இந்தியாவுக்கு தாக்க வேண்டுமாயின் கொழும்பு தாஜ் ஹோட்டலிலும், சீனாவுக்கு தாக்க வேண்டுமாயின் கொழும்பு சங்ரில்லா ஹோட்டலிலும் தாக்குதலை நடத்த வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
குண்டுத்தாக்குதல்களின் இரண்டு தாக்குதல்தாரிகளின் தந்தையான இப்ராஹிம் பற்றி மக்கள் விடுதலை முன்னணிக்கும், அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவுக்கும் நன்கு தெரியும். ஏனெனில் 2020 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய பட்டியலில் இப்ராஹிமின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் யுக்திய நடவடிக்கையின் ஊடாக இளைஞர்கள் தொகை கணக்கில் கைது செய்யப்பட்டு வெலிகட சிறைச்சாலையில் நிரப்படப்பட்டார்கள். இவர்களை பார்ப்பதற்கு வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றிருந்த போது மூன்று முஸ்லிம் இளைஞர்கள் என்னிடம் வந்து ‘சேர் நாங்கள் சஹ்ரானின் வகுப்பில் கலந்துக் கொண்டோம்.இந்த காரணத்தால் கைது செய்யப்பட்டோம்.எமக்கு எதிராக இன்று வரையில் வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை. குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படவில்லை’ என்று குறிப்பிட்டார்கள்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் பலர் இன்றும் சிறையில் உள்ளார்கள். அவர்களுக்கு இதுவரையில் நீதி கிடைக்கவில்லை. இரண்டு பிரதான குண்டுதாரிகளின் தந்தையான இப்ராஹிம் வெளியில் உள்ளார். இவரது சொத்துக்களை அரசுடமையாக்கி குண்டுத்தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டும்.அதுவே நியாயமானது.
குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்துவேன் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிடுவது அவரது போலியான வாக்குறுதிகளில் ஒன்றாகும். குண்டுத்தாக்குதல் விவகாரம் தான் இந்த நாட்டில் இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களின் வெற்றியை தீர்மானித்தது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ குண்டுத்தாக்குதலின் உண்மையை வெளிப்படுத்தவில்லை. ஏனெனில் அவர் தான் தெஹீத் ஜமாத்தே அமைப்பை போசித்தார். இந்த அரசாங்கமும் உண்மையை ஒருபோதும் வெளிப்படுத்தாது என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறேன் என்றார்.

