அக்குறனை பிரதேச சபை உறுப்பினர் ஹஜ்ஜி முஹித்தீனுக்கு எதிராக ஐக்கிய தேசிய கூட்டமைப்பு ஒழுக்காற்று நடவடிக்கை!

கடந்த 2025 ஜூன் மாதம் 12 ஆம் திகதி இடம்பெற்ற அக்குறனை பிரதேச சபையின் முதலாவது அமர்வுக்கு தகுந்த காரணமின்றி சமுகமளிக்காமை மற்றும் தன்னை யாரும் தொடர்பு கொள்ள முடியாதவாறு மறைந்திருந்தமை; தனது தொலைபேசியை செயலிழக்க செய்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளக்கமளிக்குமாறு கோரி அக்குறனை பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் அல்ஹாஜ் ஹஜ்ஜி முஹித்தீனுக்கு அக்கட்சியினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் செயலாளர் நாயகம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மஸீஹுதீன் நயீமுல்லாஹ், 2025 ஜூலை மாதம் 04 ஆம் திகதியிட்டு மேற்படி கடிதத்தை அனுப்பியுள்ளார்.
அக்குறனை பிரதேச சபையின் முதலாவது அமர்வில் தவறாது கலந்து கொள்ளுமாறும் கட்சியின் உயர்பீட தீர்மானத்துக்கு இணங்க பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவின்போது கட்சியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட உறுப்பினருக்கு ஆதரவாக வாக்களிக்குமாறும் கடந்த ஜூன் 11ஆம் திகதி உங்களுக்கு எழுத்து மூலமும் தொலைபேசி ஊடாகவும் பணிப்புரை வழங்கப்பட்டிருந்தது. எனினும், தகுந்த காரணம் ஏதுமின்றியும் கட்சியின் அனுமதி பெறாமலும் கூட்டத்துக்கு சமுகமளிக்க தவறியமை மற்றும் உங்களை எவரும் தொடர்புகொள்ள முடியாதவாறு கையடக்கத் தொலைபேசியை செயலிழக்கச் செய்திருந்ததமை என்பன திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளென கட்சி உயர்பீடத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது கட்சியின் யாப்புக்கு முற்றிலும் முரணானதும் கட்சிக் கட்டுக்கோப்பை மீறும் செயலுமாகும். எனவே, உங்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள கட்சியின் உயர்பீடம் ஏகமனதாக தீர்மானித்துள்ளது எனவும் அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கட்சி அங்கத்துவத்தில் இருந்து நீக்குவது அடங்களாக ஏன் உங்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக் கூடாது? ” என்பதற்கான நியாயமானதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதுமான காரணங்கள் ஏதுமிருப்பின் அதுபற்றிய உங்களது விளக்கத்தினை இக்கடிதம் கிடைக்கப்பெற்று 14 நாட்களுக்குள்ளாக சமர்ப்பிக்குமாறும், தவறும் பட்சத்தில் நீங்களாகவே குற்றத்தை ஒப்புக் கொண்டதாக கருதி உங்களை கட்சி அங்கத்துவத்தில் இருந்து நிரந்தரமாக நீக்குவதற்குண்டான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 06 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது ஐக்கிய தேசிய கூட்டமைப்பு அதன் “தராசு” சின்னத்தில் அக்குறனை பிரதேச சபைக்காக வேட்பாளர்களை களமிறங்கியிருந்தது. தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் அக் கட்சிக்கு கிடைத்த ஒரேயொரு வெகுமதி (போனஸ்) ஆசனத்துக்காக அதி கூடிய வாக்குகளை பெற்றிருந்த வேட்பாளரான ஹஜ்ஜி முஹித்தீன் அக் கட்சியால் பரிந்துரைக்கப்பட்டிருந்தார் என்பதும் அவர் இதற்கு முன்னரும் சில காலம் அக்குறனை பிரதேச சபை உறுப்பினராக பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



