மலேசியாவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர் கைது

மலேசியாவின் புக்கிட் தம்பான் பகுதியில் இலங்கையர் ஒருவர் உட்பட மலேசிய பிரஜைகள் இருவருடன் சேர்ந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பினாங்கு போதைப்பொருள் குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், வீடு ஒன்றில் இயங்கி வந்த போதைப்பொருள் உற்பத்தி நிலையமும் முற்றுகையிட்டு இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த இடத்தில் ஹெரோயின் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்கள் பெருமளவில் கைப்பற்றப்பட்டதாக மலேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சந்தேகநபர்களான இலங்கையர் மற்றும் மலேசிய பிரஜைகள் இருவர் வசம் இருந்த நான்கு ஆடம்பர கார்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், எதிர்வரும் 19ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக மலேசிய ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

