இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியும் உடந்தையாக செயற்பட்ட அவரது மனைவியும் இன்று மாலை கைது.

பாறுக் ஷிஹான்
இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை குவாஷி நீதிமன்ற நீதிபதியும் உடந்தையாக செயற்பட்ட அவரது மனைவியும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று(18) மாலை அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை பகுதியில் இயங்கி வந்த கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் அமைந்துள்ள அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பாதிக்கப்பட்ட பெண் தனது வழக்கு ஒன்றிற்காக குறித்த அலுவலகத்திற்கு சென்று வந்த நிலையில் தன்னிடம் இலஞ்சமாக பணம் கேட்கப்படுவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு புலனாய்வு அதிகாரிகளிடம் கடந்த மாதம் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
குறித்த முறைப்பாட்டிற்கமைய இன்று மாறுவேடத்தில் மருதமுனை பகுதியில் இயங்கி வந்த காதி நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் அமைந்துள்ள அலுவலகத்தில் அருகில் அதிகாரிகள் காத்திருந்துள்ளனர்.
இதன்போது முறைப்பாட்டினை வழங்கிய அப்பெண் ஆணைக்குழு அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியிடம் சென்று குறித்த இலஞ்ச பணத்தை தருவதாக கூறி சிறு தொகை பணத்தை நீதிபதியின் மனைவியிடம் வழங்கியுள்ளார்.
இதன்போது அங்கு மாறு வேடத்தில் காத்திருந்த இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிபதி மற்றும் மனைவியை கைது செய்ததுடன் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு சந்தேக நபர்களை அழைத்துச் சென்றுள்ளனர்.
பாறுக் ஷிஹான்

