News

நீங்கள் வரிசைகளில் நிற்பதை கண்டு துன்பப்பட்டேன், துயரப்பட்டேன்… இந்த நாட்டை காக்க வேண்டும் ஜனாதிபதி பதவியை ஏற்றேன்.. அது தவறா?

வரிகளை குறைப்பதாகவும் பொருட்களின் விலைகளை குறைப்பதாகவும் தமது கொள்கைப் பிரகடனங்களில் சஜித் பிரேமதாசவும், அனுரகுமார திஸாநாயக்கவும் மக்களை ஏமாற்றி நாட்டை நாசமாக்க முயற்சிப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பொருட்களின் விலைகளையும் வரிகளையும் குறைக்க தானும் விரும்புவதாகவும், எனினும், ரூபாயை பலப்படுத்தி, சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் பிரகாரம் செயற்படுவதன் மூலம் மாத்திரமே தன்னால் அதனைச் செய்ய முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அதனைத் தவிர வேறு மாற்றுவழி இருந்தால் உடனடியாக ஐ.எம்.எப் உடன் நடத்தும் பேச்சுவார்த்தையில் அதனை சமர்ப்பித்து கருத்தரிந்து கொள்ளுமாறு சஜித் பிரேமதாஸவிடமும் அநுர திசானாயக்கவிடமும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.

பிட்டகோட்டையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று பிற்பகல் (25) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட சம்மேளனக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கையன் என்ற வகையிலேயே நாட்டை காக்க ஜனாதிபதி பதவியை ஏற்றேன். அது தவறா? நீங்கள் வரிசைகளில் நிற்பதை கண்டேன். அந்த நேரத்தில் வரிசையில் மக்கள் அல்லல் பட்டதை கண்டேன். பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கினேன். அதனை செய்யாமல் ஜே.வி.பி.யும், ஐக்கிய மக்கள் சக்தியும் சாபத்தை தேடிக்கொண்டுள்ளன.

பொருளாதாரத்தைப் பாதுகாக்க 3 பில்லியன் டொலர்கள் தேவைப்படும் என்பதை 2020 ஆம் ஆண்டு தேர்தலில் நான் வௌிப்படையாக கூறினேன். ஐக்கிய மக்கள் சக்தியும் ஜே.வி.பி.யும் அதனை சொல்லவில்லை. அதனால் நான் தோற்றுப்போனேன். ஆனால் பிரச்சினையின் தன்மையை நான் அறிந்திருந்தேன். உலக வங்கி, சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி உதவிகளைக் கோரினேன். அந்த உதவியுடன் மீண்டு வர முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நாட்டை விட்டுச் சென்றதும் எவரும் நாட்டை ஏற்க வரவில்லை. சபாநாயகர் தலைமையிலான குழுவை அமைக்கச் சொன்னார்கள். எனக்கு உதவ மறுத்தார்கள். டலஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவளித்தார்கள்.

உலக வங்கி ஐஎம்எப் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் 18 கடன் வழங்கிய நாடுகளுடன் பேசினோம். தற்போது அவர்களுடனான ஒப்பந்தத்துடன் செயற்படுகிறோம். எமக்கு கஷ்டமான காலம் இருந்தது. பணத்தை அச்சிட முடியவில்லை. கடன்பெற முடியவில்லை. அதற்கான வரியை அதிகரித்து, கட்டணங்களை அதிகரித்து வருமானத்தை அதிகரித்தோம். அந்த சுமைகளைத் தாங்கிய மக்களுக்கு நன்றி. இன்று சுமை குறநை்திருக்கிறது.

இன்று மின்,கேஸ் கட்டணங்கள் குறைந்துள்ளன. சுமைகள் ஓரளவிற்கு குறைந்துள்ளன. ரூபாவின் பெறுமதியை வலுப்படுத்திய பின்னர் ஏனைய சலுகைகளை வழங்குவோம். மேற்கூறிய ஒப்பந்தங்களின் இலக்குகளையும் அடைய வேண்டும். அவற்றை அடைந்தால் நாடு வலுவடையும். அதுவே அரசாங்கத்தின் திட்டமாகும்.

எதிர்கட்சியினர் பொருட்களின் விலையை குறைப்பதாகச் சொல்கிறார்கள். வரியை குறைத்தால் வருமானம் குறையும். அதனால் நாம் மீண்டும் 2022ஆம் ஆண்டின் நிலைக்குச் செல்ல வேண்டும். எனவே ரூபாயின் பெறுமதியை அதிகரித்த பின்னர் வரியை குறைப்பதே நல்லதாகும்.

அதனால் நமது நாட்டிலும் எதிர்கட்சியினர் என்ன செய்ய போகிறார்கள் என்பதை வௌிப்படையாக கூற வேண்டும். இந்த ஒப்பந்தத்தில் கைசாத்திட்டதன் பலனாக எமக்கு உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து மாதாந்தம் 700 மில்லியன் டொலர்கள் கிடைக்கும். அதற்கு ஜப்பானும் உதவிகளை வழங்குவதாக கூறியுள்ளது.

எனவே, மூன்று கட்சிகளும் இணைந்து சர்வதேச நாணய நிதியத்துடன் பேசுவோம். அந்த விடயத்தை முழு நாட்டுக்கும் சொல்வோம். இறுதியில் மூச்சுவிடவும் வரி விதிக்கும் நிலைக்கு வந்துவிடக்கூடாது. மக்களுக்கு உண்மையை சொல்லுங்கள். அதனால் நாட்டு மக்கள் சிலிண்டர் சின்னத்து வாக்களியுங்கள். இல்லாவிட்டால் சிலிண்டர் அற்ற யுகம் மீண்டும் வரும். அதை நினைத்து அழ வேண்டாம்.” என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button