உயர் இரத்த அழுத்தத்தை (High Blood Pressure) பாரிய அளவில் கட்டுப்படுத்தக்கூடிய திறன் கொண்ட ஒரு மருந்தை களனி பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவினர் உருவாக்கி சாதித்தனர்

களனி பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தின் மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவானது, உயர் இரத்த அழுத்தத்தை (High Blood Pressure) குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கும் திறன் கொண்ட ஒரு மருந்தை உருவாக்கியுள்ளது.
மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவின் பணிப்பாளரான பேராசிரியர் அசித டி சில்வா ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போது இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன் இந்த ஆராய்ச்சி கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டதாகவும், இது பொதுவாகப் பயன்படுத்தப்படும் 3 மருந்துகளை ஒரே மாத்திரையில் இணைப்பதில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் நோக்கம், மிகவும் பயனுள்ள சிகிச்சை மற்றும் நோயாளியின் வசதிக்காகவே ஆகும்.
மேலும் அவர் கூறுகையில் “உயர் இரத்த அழுத்தத்தை முழுமையாகக் குணப்படுத்தக்கூடிய மருந்து எதுவும் இல்லை என்றாலும், இந்த புதிய மருந்து அதனைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
3 மருந்துகளை ஒன்றாக இணைப்பதன் மூலம், நோயாளிகள் ஒரு நாளைக்கு ஒரு மாத்திரையை மட்டும் எடுத்துக்கொண்டால் போதும்.
இது 88% நோயாளிகளுக்கு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.
விரிவான மருத்துவச் சோதனைகள் 2024ஆம் ஆண்டில் நிறைவடைந்தன என்றும், அதன் முடிவுகள் உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் (FDA) சமர்ப்பிக்கப்பட்டன என்றும் அவர் கூறினார்.
இதில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) கடந்த ஜூன் மாதம் மருந்துக்கு ஒப்புதல் அளித்ததுடன், உலக சுகாதார நிறுவனம் (WHO) இதனை இந்த ஆண்டு செப்டம்பரில் அதன் அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் இணைத்துள்ளது.
இந்த மருந்தைப் பயன்படுத்தி உயர் இரத்த அழுத்தத்தை நெருக்கமாகக் கட்டுப்படுத்துவது, பக்கவாத அபாயத்தை 60% வரை குறைக்கலாம் என்றும் பேராசிரியர் டி சில்வா மேலும் வலியுறுத்தினார்.



