நேற்றிரவு மிட்டியாகொட பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பெண் மஹதுர இசுருவின் மாமியாவார் – இக்கொலை பாதாள உலக கரந்தெனிய சுட்டாவின் வழிகாட்டுதலில் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம்

காலி, மிட்டியாகொட, கிருலகஹேவெல சந்தியில் உள்ள ஒரு ஹோட்டிலில் நேற்று (17) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் ராஜமெதுர வீதி, தம்பஹிட்டிய, மிட்டியாகொட பகுதியில் வசிக்கும் 48 வயதுடையவர் ஆவார்.
குறித்த ஹோட்டலில் அவர் காசாளராக இருந்துள்ளார்.
கருப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாம் தெரியாத நபர்கள் ஹோட்டலுக்குள் நுழைந்து பெண்ணை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
குறித்த மோட்டார் சைக்கிள் பத்தேகம, அம்பேகமவில் கைவிடப்பட்ட நிலையில் நேற்று இரவு கண்டுபிடிக்கப்பட்டதாக மிட்டியாகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இடம்பெற்ற கொலை சம்பவம் அம்பலாங்கொடை நகர சபைக்கு அருகில் நடந்த மிரந்த வருசவிதானவின் கொலைக்கான பழிவாங்கலாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று உயிரிழந்த பெண், வருசவிதானவின் கொலைக்கு காரணமானவர் என சந்தேகிக்கப்படும் மஹதுர இசுருவின் அத்தை எனக் கூறப்படுகிறது.
இவர் மே 04ஆம் திகதி மிட்டியகொடயிலுள்ள உணவகமொன்றில் கொல்லப்பட்ட மஹதுர நளின் என்பவரின் சகோதரியும் ஆவார்.
அதன்படி நேற்றைய துப்பாக்கிச் சூடு கரந்தெனிய சுட்டாவின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுடன் இந்த ஆண்டு இதுவரை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது.
இதில் 55 பேர் உயிரிழந்துள்ளதோடு, 56 பேர் காயமடைந்துள்ளனர்.



