ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவில் இருந்த எனது மற்றும் என் நண்பர் சம்பிக்க ரணவக்க, சிவப்பு சகோதரர்களின் ஜனாதிபதி வேட்பாளர் ஆகியோரது பிரஜா உரிமையைக் கூட கோட்டபாய அரசில் இரத்துச் செய்ய முயற்சித்தார்கள் ; ரவூப் ஹக்கீம்
‘‘எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில் திருகோணமலை மாவட்டத்துக்கு பாரிய அபிவிருத்தி யுகமொன்று உருவாகும். அதேபோன்று, எங்களின் செயற்பாடுக ளுக்கு ரணில் விக்கிரமசிங்க பொருட்டல்ல. அவரைப் பற்றிப் பேசுவதிலும் பயனில்லை’’ என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
சேருவில பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (26) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
‘‘கந்தளாய் சீனித் தொழிற்சாலை இன்னும் நட்டத்தில் இயங்கி வருகிறது. அதனை தனியார் மயப்படுத்துவதாகக் கூறி நிறுவனமொன்றுக்கு வழங்கியிருந்தாலும் அதில் எந்தப் பயனும் இல்லை. சகல ஒவ்வொரு தேர்தல் தொகுதிக ளுக்கும் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் பாரிய தொழிற்சாலைகள் பெற்றுக்கொடுத்து தொழிலில்லாத இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை கள் எமது ஜனாதிபதியின் காலத்தில் நிறைவேற் றப்படும். அதற்கான திட்டங்களை தற்போதே தயார் செய்து நிறைவு செய்து விட்டோம்.
மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவே முதன் முறையாக ஆடைத் தொழிற்சாலைகளை ஆரம்பித்து வைத்தார். அதன் பின்னரே இந்த நாட்டின் தொழில் உற்பத்திகள் விசேடமாக அந்நிய செலாவணியை கொண்டுவரும் தொழிற்றுறையாக கட்டியெழுப்பட்டது.
சஜித்தின் ஆட்சிக் காலத்தில் பாரிய அபிவிருத்தி யுகமொன்று இந்த நாட்டுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். முன்னெப்போதும் இல்லாதவாறு வெளிநாட்டு முதலீடுகள் நாட்டுக்கு கிடைக்கும் வகையிலான யுகமொன்று ஏற்படும் என்றும் எதிர்பார்க்கிறோம். திருகோணமலை மாவட்டம் உபாய முறை ரீதியில் மிகவும் இருப்பிடத்தில் அமைந்துள்ளமை தொடர்பில் முழு சர்வதேசமும் கவனம் செலுத்தியுள்ளது. அதனை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, நாட்டின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக் கொண்டு மக்களின் முன்னேற்றத்துக்காக அதிகபட்ச பயனை இந்தப் பகுதியில் பெற்றுக் கொள்ள வேண்டும்.
அதற்காக திட்டங்களை நடைமுறைப்படுத் துவதற்கு இதற்கு முன்னர் முயற்சித்திருந்தாலும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தினார்கள். விசேடமாக தெளபீக் எம்.பியின் முயற்சியில் சவூதி அபிவிருத்தி நிதியத்தினூடாக உத்தேச களுகங்கை நீர்த்தேக்கத்தை அமைத்து ஜனரஞ்சன வாவி, சிங்க வாவி, சூரிய வாவி, காந்தி வாவியினூடாக குரங்குபாஞ்சான் வாவி வரை மகாவலி கங்கைகளை களுகங்கைகளின் நீரை ஒன்று சேர்த்து இந்த பிரதேச விவசாயிகளுக்கு மேலும் 20,000 ஏக்கருக்கு அதிகமான பகுதியில் புதிதாக பயிரிடமுடியும்.
மூன்று பருவகாலத்திலும் பயிர்ச்செய்கை செய்யக்கூடிய யுகத்தை உருவாக்குவோம். பாரிய தொழிற்சாலைகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. தற்போதையளவில் இந்திய அரசுடன் பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டிருந்தாலும் அவற்றில் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அவற்றை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு தேவையான திட்டங்களை வகுத்துள்ளோம். அவை எமது எதிர்கால ஜனாதிபதியின் திட்டங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தி யுகமொன்று திருகோணமலை மாவட்டத்தில் உருவாகும் என்பதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகிறோம்.
எங்களுக்கு எதிர்த்தரப்பில் இருக்கும் ரணில் விக்கிரமசிங்க எங்களுக்கு சிறிதளவும் பொருட்டல்ல. அவரைப் பற்றி பேசுவதிலும் பயனில்லை. அவர் இந்த தேர்தலில் நான்காம் இடத்துக்கு சென்று விடுவாரா என்றும் கூற முடியாது. இருந்தபோதும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியிலிருந்த காலப்பகுதியில் இலஞ்ச ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழு என்றவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. அந்தக் குழுவில் நானும் இருந்தேன். எனது நண்பர் சம்பிக்க ரணவக்க இருந்தார். சுமந்திரன் இருந்தார். அதிலொரு முக்கியஸ்தர் என்றால் சிவப்பு சகோதரர்களின் ஜனாதிபதி வேட்பாளர்.
அந்தக்குழுவில் பல்வேறு விடயங்கள் பேசப்பட்டிருந்தாலும் தேவையான சட்டத்திட்டங்கள் இல்லாததால் எதுவும் செய்ய முடியாமல் போனது. அதன் பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றியடைந்து அரசாங்கத்தை அமைத்ததன் பின்னர் இந்த ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவினூடாக விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்தார்கள். அதனூடாக எங்களின் பிரஜா உரிமையைக் கூட இரத்துச் செய்ய முயற்சித்தார்கள் என்றார்.