இன்றைய போராட்டத்துக்கு வருவது திருடர்கள்தான்… யாரும் நினைத்தவுடன் அரசாங்கமொன்றை கவிழ்க்க முடியாது… ஆனால் பௌத்த சாசனம் மீது கை வைக்கும் அரசாங்கம் வீழ்த்தப்படும் ; சீலரத்ன தேரர்

நுகேகொடை பேரணிக்கு செல்ல மாட்டேன் என தமிழிலும் ஒரு முறை கூறிக் கொள்கின்றேன் என பத்தரமுல்லை சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
நுகேகொடை பேரணி குறித்து ஊடகங்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“எதிர்கட்சியால் நடத்தப்படும் இந்தப் போராட்டத்துக்கு திருடர்கள் வருவார்களா அல்லது நாட்டை ஆளக்கூடிய தேர்ச்சி பெற்றவர்கள் வருவார்களா என்பது தெரியாது.
ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி எனில், அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாடி தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். இது எவ்வாறான ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி என எனக்கு புரியவில்லை.
நான் பேரணிக்கு போக மாட்டேன் என ஆங்கிலத்திலும் கூறிவிட்டேன். மீண்டும் தமிழிலும் ஒரு தடவை கூறுகின்றேன். நான் போகவில்லை.
நினைத்தவுடன் அரசாங்கமொன்றை வீழ்த்த முடியாது. தற்போதைய அரசாங்கத்திற்கு இன்னும் ஆண்டுகள் உள்ளன. அப்படியெனில், பாரிய அரகலய ஒன்றின் மூலமே அரசாங்கத்தை வீழ்த்த முடியும்.
எங்களை இனவாதம் பேச வேண்டாம் என அரசாங்கம் கூறுகின்றது. ஆனால், திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் அரசாங்கமே இனவாதமாக நடந்துகொண்டது. பௌத்த சாசனம் மீது கை வைக்கும் அரசாங்கம் வீழ்த்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.



