News

இக்கட்டான சூழ்நிலைகளில் இராணுவம் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் செய்யும் பணிகள் மகத்தானவை

ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதற்குப் பதிலாக, எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு, உறுதியுடனும், ஒரே நோக்கத்துடனும், நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றும்போதே ஒரு நாடாக நாம் முன்னோக்கி செல்ல முடியும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதியாகவும் அரசாங்கமாகவும் நமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளையும், மதங்கள் என்ற வகையில் வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளையும், மக்கள் மற்றும் பாதுகாப்புப் படைகள் என்ற வகையில் நமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளையும் முறையாக நிறைவேற்றுவதன் மூலம், வரலாற்றில் நமக்கு இருந்த பெருமை மற்றும் கெளரவத்துடன் தாய்நாட்டை மீண்டும் விரைவாக கட்டியெழுப்ப முடியும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என்று அழைப்பு விடுத்தார்.

இன்று (21) முற்பகல் தியதலாவ இலங்கை இராணுவ கல்வியியல் கல்லூரியின் கெடட் அதிகாரிகள் விடுகை அணிவகுப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.

நமது நாடு ஒரு சிறந்த பாரம்பரியத்தையும் வெற்றிகளையும் பெற்றிருந்தாலும், கடந்த சில தசாப்தங்களாக நாடு அனைத்து வகையான வீழ்ச்சிகளுக்கும் உள்ளாகியுள்ளது என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, இன்று அனைவருக்கும் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பு, தாய்நாட்டை மீண்டும் உலகில் மதிப்புமிக்க மற்றும் பாராட்டப்படும் ஒரு நாடாக மாற்றுவதாகும் என்று தெரிவித்தார்.

ஒரு அரசாங்கமாகவும் ஜனாதிபதியாகவும் தமக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை, நாட்டின் வளர்ச்சிக்காக முழுமையாகப் பயன்படுத்துவேன் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும், அதற்கு தேவையான பொறிமுறைகளைத் தயாரிப்பதற்கும், சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதற்கும், அரசியலை மக்களின் செல்வத்தை குவிக்கும் தொழிலிலிருந்து, பொதுமக்களுக்கு சேவை செய்யும் சமூகப் பணியாக மாற்றுவதற்கும் அரசாங்கம் தனது பொறுப்பை நிறைவேற்றி வருவதாக இங்கு தெரவித்தார்.

Recent Articles

Back to top button