சரியாக உறுதிப்படுத்தப்படாத மற்றும் தவறான செய்திகளைத் தொடர்ச்சியாக ஒளிபரப்பி வருவதற்காக, ஹிரு ஊடக நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி TRC க்கு காவல்துறை வேண்டுகோள் கடிதம் அனுப்பியது

சரியாக உறுதிப்படுத்தப்படாத மற்றும் தவறான செய்திகளைத் தொடர்ச்சியாக ஒளிபரப்பி வருவதற்காக, ஹிரு ஊடக நிறுவனத்திற்கு (Hiru Media Network) எதிராகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரி, இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிற்கு (TRC) கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்புல் கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர், இந்த விவகாரம் தொடர்பான விசாரணையில் கண்டறியப்பட்ட விடயங்கள் குறித்து தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
அதன்படி, ஒளிபரப்பு உரிமங்களை வழங்கும் உரிய அதிகாரசபை என்ற ரீதியில், இது தொடர்பில் எதிர்கால நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்தக் கடிதத்தின் ஊடாகத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிடம் கோரப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கும் ஹிரு ஊடக நிறுவனத்திற்கும் இடையில் தொடர்ச்சியாக மோதல் போக்கு நிலவி வரும் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஊடக நிறுவனம் உறுதிப்படுத்தப்படாத மற்றும் தவறான செய்திகளை ஒளிபரப்புவதாக அதிகாரிகள் பலமுறை குற்றம் சுமத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.



