390 ரூபாய் வரை உயர்ந்திருந்த அமெரிக்க டொலரின் பெறுமதியை ரணில் விக்ரமசிங்க 293 ரூபாயாக குறைத்து
அதனை 250 ரூபாவாகக் குறைக்கவும் திட்டமிட்டிருந்தார் – இதனை கண்டு அமெரிக்க பொருளாதார நிபுணர்களே வியப்படைந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது ; ராஜித்த

நாட்டில் நிலவிய அனர்த்த நிலைமைகளைக் கருத்திற்கொண்டு இந்தியா மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இருந்து அரசாங்கம் பெற்றுக் கொண்டது கடன்களே தவிர, அவை நன்கொடைகள் அல்ல என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்தியா வழங்கியுள்ள 450 மில்லியன் அமெரிக்க டொலரில், 350 மில்லியன் டொலர் கடனாகும்.
வெறும் 100 மில்லியன் டொலர் மாத்திரமே மானியமாக (Grant) வழங்கப்பட்டுள்ளது.
IMF வழங்கியுள்ள 206 மில்லியன் அமெரிக்க டொலர், 8% என்ற மிக அதிகளவிலான வணிக வட்டி விகிதத்தில் பெறப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் 1% அல்லது 2% போன்ற குறைந்த வட்டி விகிதங்களிலேயே கடன்களைப் பெற வேண்டும்.
8% வட்டிக்கு கடன் வாங்குவது எதிர்காலத்தில் பாரிய பொருளாதார நெருக்கடியையே தோற்றுவிக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியை முகாமைத்துவம் செய்வதில் தற்போதைய அரசாங்கத்திற்கு அனுபவம் இல்லை எனச் சுட்டிக்காட்டிய ராஜித சேனாரத்ன, ரணில் விக்ரமசிங்கவின் சாதனைகளை நினைவுகூர்ந்தார்.
390 ரூபாய் வரை உயர்ந்திருந்த அமெரிக்க டொலரின் பெறுமதியை 293 ரூபாய் வரை ரணில் விக்ரமசிங்க குறைத்தார்.
அதனை 250 ரூபாவாகக் குறைக்க அவர் திட்டமிட்டிருந்த போதே ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
கொரோனா மற்றும் உலகப் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட எந்தவொரு நாடும் ஒன்றரை வருடத்தில் மீண்டதில்லை.
ஆனால், இலங்கை ஒன்றரை வருடத்திற்குள் ஸ்திரமடைந்ததைக் கண்டு அமெரிக்காவின் டொனால்ட் லூ (Donald Lu) போன்ற பொருளாதார நிபுணர்களே வியப்படைந்தனர்.
புதிய கடன்களுடன் பழைய கடன்களையும் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளதால், அரசாங்கம் நிதி முகாமைத்துவத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
மேலும், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் பாரிய குறைபாடுகள் இருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளதாகவும், அவற்றை அரசாங்கம் உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.



