News

இலங்கையில் ஊடக சுதந்திரம் பறிக்கப்படுவதை ஏற்க முடியாது! – சார்க் ஊடகவியலாளர் பேரவை கடும் கண்டனம்

இலங்கை அரசாங்கம் காவல்துறையினரின் அச்சுறுத்தல்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் கருத்துச் சுதந்திரத்தை நசுக்க முயற்சிப்பதையும், ஊடக சுதந்திரத்திற்குத் தடையாக இருப்பதையும் வன்மையாகக் கண்டிப்பதாக சார்க் ஊடகவியலாளர் பேரவை (SAARC Journalists Forum) தலைவர் ராஜு லாமா தெரிவித்துள்ளார்.

சார்க் ஊடகவியலாளர் பேரவையின் (SJF) மத்திய செயற்குழு இன்று (26) விடுத்துள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கஞ்சா செடி சுற்றிவளைப்பு தொடர்பாக ‘ஹிரு’ ஊடக வலையமைப்பு அண்மையில் வெளியிட்ட செய்தி குறித்து காவல்துறையினர் விடுத்த கோரிக்கை, சுதந்திரமான ஊடகவியலின் மீது தொடுக்கப்பட்ட நேரடித் தாக்குதல் என ராஜு லாமா சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 15 மாத காலப்பகுதியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஊடகங்களை ஒடுக்குவதில் ஒரு கவலைக்குரிய போக்கை வெளிப்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதாக உறுதியளித்த போதிலும், தற்போது அரசாங்கம் ‘சர்வாதிகாரப் போக்கை’ நோக்கி நகர்வதாகவும் சார்க் சங்கம் விமர்சித்துள்ளது.

காவல்துறை உத்திகளைப் பயன்படுத்தி விமர்சகர்களை மௌனமாக்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

ஊடகவியலாளர்களின் அரசியலமைப்பு ரீதியான உரிமைகளைப் பாதுகாத்து, அவர்களின் சுயாதீனத் தன்மையை உறுதிப்படுத்த வேண்டும்.

ஊடக சுதந்திரம் மற்றும் ஊடக ஒழுக்கநெறிகள் தொடர்பான சர்வதேச தரங்களைப் பேண வேண்டும்.

மேலும், இலங்கையில் ஊடகத் துறைக்குள் அரசாங்கம் முன்னெடுக்கும் தலையீடுகளுக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்குமாறு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளுக்கும், கருத்துச் சுதந்திரத்திற்காகப் போராடுபவர்களுக்கும் சார்க் ஊடகவியலாளர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

Recent Articles

Back to top button