சாய்ந்தமருது பகுதி மாணவன் பிஸ்ருல் ஹாபிஸ் ( வயது-16 ) வீட்டில் உயிரை மாய்த்த நிலையில் ஜனாஸாவாக மீட்பு

பாடசாலை மாணவனின் சடலம் மீட்பு- சாய்ந்தமருது பகுதியில் சம்பவம்
பாறுக் ஷிஹான்
இரவு தூக்கத்திற்கு சென்ற நிலையில் பாடசாலை மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் இன்று(9) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் சாய்ந்தமருது 16 கபூர் வீதி பகுதியைச் சேர்ந்த ஜௌபர் மொஹமட் விஸ்ருல் ஹாபிஸ் ( வயது-16 ) தூக்கில் தொங்கிய நிலையில் அவரது வீட்டில் இருந்து பொலிஸாரினால் ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மரணமடைந்த சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலய பாடசாலை மாணவன் 6 மாதங்களாக மன அழுத்தம் தொடர்பில் சிகிச்சை பெற்று வந்திருந்ததாகவும் அத்துடன் 3 மாதங்களாக பாடசாலைக்கு செல்லவில்லை என்பதுடன் இந்த தற்கொலைக்கு காரணம் குறித்து ஆரம்ப விசாரணை பொலிஸ் தரப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சம்பவ இடத்திற்கு அம்பாறை மாவட்ட தடயவியல் பொலிஸார் வருகை தந்து விசாரணைகளை ஆரம்பித்த பின்னர் கல்முனை நீதிமன்ற நீதிவான் கட்டளைக்கமைய குறித்த சடலத்தின் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டு பார்வையிட்ட பின்னர் சடலம் மீட்கப்பட்டு கல்முனை ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்படவுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் தலைமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காலை வேளை உயிரிழந்த மாணவனின் தந்தை தொழுகைக்காக ஆயத்தம் செய்த நிலையில் இவ்வாறு அவரது மகன் தூக்கில் தொங்கி காணப்பட்டதாக மேலதிக விசாரணைகளில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



