அரசாங்கம் புதிய கல்வி மறுசீரமைப்புகளை மீளப் பெறும் வரை கல்வி அமைச்சுக்கு முன்னால் திங்கட்கிழமை முதல் காலவரையறையற்ற போராட்டத்தை முன்னெடுப்பதாக விமல் வீரவன்ச அறிவிப்பு

கல்வி மறுசீரமைப்புகளை மீளப் பெறக்கோரியும், கல்வி அமைச்சரின் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தியும், இலங்கையின் கல்வி அமைச்சுக்கு முன்பாக திங்கட்கிழமை முதல் காலவரையறையற்ற போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஆர்வலர் குழுவொன்று அறிவித்துள்ளது.
“பிள்ளைகளுக்காக முன்வரும் பெரியவர்கள்” (Adults Standing for Children) அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் போராட்டம், ஜனவரி 12ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக அந்த அமைப்பின் அழைப்பாளரும், முன்னாள் அமைச்சரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய வீரவன்ச, அரசியல் பேதமின்றி நாடு முழுவதிலுமிருந்து பெற்றோர்களை இந்தத் தொடர் போராட்டத்தி்ல் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
முன்மொழியப்பட்டுள்ள கல்வி மறுசீரமைப்புகள் மாணவர்களுக்கு சமமான வாய்ப்புகளை வழங்கத் தவறுவதோடு, மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் நடவடிக்கைகளையும் உள்ளடக்கியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். போதிய ஆலோசனைகள் இன்றி இந்த சீர்திருத்தங்கள் அவசர அவசரமாக நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், இது கல்வியை மேம்படுத்தும் உண்மையான முயற்சி என்பதை விட ஒரு வணிக முயற்சியாகவே அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், பாடசாலை பாடத்திட்டங்களில் இணையதள இணைப்புகள் மற்றும் யூடியூப் (YouTube) சேனல்கள் சேர்க்கப்பட்டுள்ளமை குறித்து வீரவன்ச கவலை வெளியிட்டார். அவற்றில் சில உள்ளடக்கங்கள் பொருத்தமற்றவை என அவர் குற்றம் சாட்டியதுடன், பெருமளவிலான மாணவர்களை இத்தகைய தளங்களுக்கு திசைதிருப்புவதன் மூலம் கணிசமான வருமானம் ஈட்ட முடியும் என்றும், இதன் மூலம் நிதி ரீதியாகப் பயன்பெறுவது யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
பாடசாலை மாணவர்களைப் பாதிக்கும் கல்வி மறுசீரமைப்புகள் மிகுந்த எச்சரிக்கையுடன் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று கூறிய அவர், நாடு தழுவிய ரீதியில் இதனை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் முன்னோடித் திட்டங்கள் மற்றும் கல்வி நிபுணர்களுடன் விரிவான ஆலோசனைகள் அவசியம் என்றும் தெரிவித்தார்.
அரசாங்கம் புதிய கல்வி மறுசீரமைப்புகளை மீளப் பெறும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என வீரவன்ச மேலும் தெரிவித்தார்.



