மனிதநேயத்தின் மிக மோசமான குற்றவாளி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு..

“மனிதநேயத்தின் மிக மோசமான குற்றவாளி என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை வர்ணித்த பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், அவரை கடத்திச் சென்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அமெரிக்கா மற்றும் ‘நேட்டோ’ (NATO) உறுப்பு நாடான துருக்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு ஆகியோருக்கு இடையே மிகவும் நெருக்கமான நட்பு இருப்பதால், ட்ரம்பிடம் இவ்வாறான கோரிக்கையை முன்வைப்பது ஒரு வேடிக்கையான விடயம் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், இது குறித்து துருக்கி இதுவரை உத்தியோகபூர்வமாக பதிலளிக்கவில்லை என்றாலும், அந்த நாடு இது பற்றி சிந்திக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் மேலும் விளக்குகின்றனர். பாகிஸ்தானின் ‘ஜியோ’ (Geo TV) தொலைக்காட்சியில் நடைபெற்ற நேரலை நேர்காணலின் போதே பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கடத்தியது போல, ராணுவத்தைப் பயன்படுத்தி நெதன்யாகுவையும் கடத்த வேண்டும் என்று அவர் அங்கு வலியுறுத்தியுள்ளார்.
காசா பகுதியில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக நெதன்யாகு இழைத்த குற்றங்களை கருத்திற்கொண்டு, அவரை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஏற்கனவே பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.”



