100 வாழ்க்கை பாடங்கள் நூல் பற்றிய பார்வை…

புகழனைத்தும் எல்லாம் வல்ல இறைவனுக்கே உரித்தாகட்டும் .
ஸலாத்தும் ஸலாமும் எமது இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களை பின்பற்றும் நல்லடியார்கள் மீதும் உரித்தாகட்டும்.
ஓய்வு நேரங்களை புத்தக வாசிப்புகளுக்காக ஒதுக்கி, நல்ல நூல்களை வாசித்துப் பயனடைந்து, அதன் சிறப்புகளை அறிந்து, பிறரும் பயனடையும்
வகையில் பகிர்ந்து கொள்வதில் ஒரு சிறு சந்தோச ஊற்று என்னுள் தோன்றுவதாகவே உணர்கின்றேன்.
அந்த வகையில் அண்மையில் அரும்பெரும் பொக்கிஷமான *100 வாழ்க்கை பாடங்கள்*
என்னும் பெறுமதி மிக்க நூல் வாசிக்க கிடைத்தது.( நூலின் உள்ளே வசிக்கக் கிடைத்தது. என்பதே சரியான பதம் என நினைக்கிறேன்.) அல்ஹம்துலில்லாஹ்.
கடந்த நான்கு தசாப்தங்களாக தங்களது அருமையான பேச்சாலும், எழுத்தாற்றலினாலும் சமூகத்துக்கு பெரும் ஆன்மீகத் தொண்டாற்றி வரும் பெருமதிப்புக்குரிய உஸ்தாத் ஏ.ஸீ அகார் முஹம்மத் அவர்கள் இந்த நூலை எழுதி இருக்கிறார்கள்.
நூல் பற்றி கேள்விப்பட்டு, வாசிக்க வேண்டுமே என்ற ஆவலில் இருந்தபோது, எமது குடும்ப நண்பர் சகோதரர் அஸீஸ் அவர்களின் (தனது அன்புத் தந்தையாரின் நினைவாக) அன்பளிப்பாக இப்பெறுமதியான நூல் என் கரம் கிட்டியது .
இன்ஷா அல்லாஹ் இறைவன் அவருக்கான நற்கூலியை நிச்சயமாக வழங்குவான்.
உண்மையிலேயே அனைவரும் வாசிக்க வேண்டிய,
குறிப்பாக இளம் சமுதாயத்தவரின் கைகளில் தவழ வேண்டிய அற்புத நூல்.
பெறுமதி மிக்க இந்த நூலில் உள்ளடங்கியுள்ள அனைத்து விடயங்களும்
நமது இம்மை, மறுமை நல்வாழ்வுக்கான உன்னத வழிகாட்டியாகவும், திறவுகோலாகவும் காணப்படுகின்றன.
இந்த நூல் பற்றி நான் பேசுவது “குருவி தலையில் பனங்காய்” போன்ற கனதியான நிலைதான்.
ஆனாலும் நூல் பற்றி ஓரிருவரிடமாவது எத்தி வைத்து… அவர்களும் வாசித்து பயனடைந்தால் …
நலவான
பெரும் சமுத்திரத்திலிருந்து ஒரு துளியாவது பெற்றுக் கொள்வது போன்ற நலவை நாமும் பெற்று விடலாம் என்ற ஒரு நப்பாசையில் எழுதுகின்றேன்.
இந்நூல் பற்றி நான் பேசுவதை விட இந்நூல் உங்களிடம் அதிகம் பேசும் என்பதுதான் நிஜம்.
அல்ஹம்துலில்லாஹ். மற்றவர்களைப் போன்று, ஏற்கனவே இந்த நூலில் உள்ள சில பகுதிகளை ஒலி வடிவில் செவிமடுக்கும் வாய்ப்பை எனக்கும் இறைவன் ஏற்படுத்தித் தந்திருந்தான்.
அழகிய கனதியான அட்டையுடன் 370 பக்கங்களில் உள்ளடக்கப்பட்டிருக்கும் 100 பாடங்களையும் வாசிக்கும் போது, உஸ்தாத் அவர்கள் ஒலிவடிவில் அமைதியாக, ஆழமானதாக, இரத்தின சுருக்கமானதுமாக நேரடியாகப் பேசி புரிய வைப்பது போன்ற உணர்வையே இந்த நூல் நமக்குத் தருவது அவர்களின் அறிவு அனுபவ முதிர்ச்சியின் வெளிப்பாடு என்பதுதான் உண்மை . மாஷா அல்லாஹ்.
” நமது ஆன்மீக வாழ்வையும் லெளகீக வாழ்வையும் போஷித்துப் பலப்படுத்திக் கொள்ள, அல்குர்ஆன், சுன்னாவையும் ஆரம்பகால சமகால அறிஞர்களின் கருத்துக்களையும், அடிப்படையாகக் கொண்டே பாடங்கள் எழுதப்பட்டுள்ளன.
அடையாள புருஷர்களாக கொள்ளத்தக்க பிற்பட்ட காலத்திலும், சமகாலத்திலும் வாழ்ந்த ,வாழ்ந்து கொண்டிருக்கின்ற சில ஆளுமைகளின் வாழ்வும் பணிகளும் பற்றியும் சில பாடங்கள் பேசுகின்றன என மாண்புமிகு உஸ்தாத் அவர்கள் தங்களது முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
கடின தேடல்களின்
பொருட்டு
மிகப் பெறுமதி மிக்க அம்சங்கள் இப்பனுவலுக்குள்ளே உள்ளடக்கப்பட்டிருப்பது தெளிவு.
நூலாக்கத்திற்கான உழைப்பின் பெறுமதியையும், இதற்காக எவ்வளவு கால நேரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது என்பதனையும் நூலை வாசிக்கும் அனைவராலும் புரிந்து கொள்ள முடியும்.
நூலின் முதல் பாடமே
” வஹியே தீர்வு ” எனும் தலைப்பில்
வேத வெளிப்பாட்டின் முக்கியத்துவம் உணரப்படாமையின் விளைவினால், இவ்வுலகம் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்,
அதற்கான தீர்வு, நாம் அனைவரும் அல்குர்ஆனின் பக்கமே திரும்ப வேண்டிய காலமிது.
வேறு வழியே இல்லை.
அதன் ஒளியின் பக்கமே நாம் அனைவரும் திரும்புவோம் என்பதனையும் இப்பாடத்தின் மூலம் உணர்த்தியிருக்கிறார்கள்.
அடுத்து சிந்தித்தலை நமது நாளாந்த நடைமுறை வாழ்வியல் வணக்கமாக மாற்றிக் கொள்ள நாம் முயற்சிக்க வேண்டும் என்பதையும் அல்குர்ஆன் வசனங்களை கொண்டு விளக்கும் அழகிய பாடமாக “சிந்தித்தல் ஒரு வணக்கம்”
என்ற தலைப்பில் தந்திருக்கிறார்கள்.
” திக்ர் என்ற வணக்கத்தில் ஈடுபடுவது போன்று, ஃபிக்ர் என்ற வணக்கத்திலும் ஈடுபடுவோம் என நமது சிந்தனையை தூண்டி விடுகிறார்கள்.
மூன்று வகையான அறிவையும் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் விளக்கி,
“அறிவைப் பயன்படுத்தி,
நமது
இறுதி இலக்கான அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைந்து கொள்வோம் என்கிறார்கள்.
“அணிதலும் களைதலும்”
எனும் தலைப்பில்
“நற்குணங்களை அணிதலும், துர்க்குணங்களைக் களைதலும் நம் மார்க்கம் என்பதையும்,
” நன்மை செய்வோம், நலம் பெறுவோம்”
எனும் தலைப்பில் அஸ்தஃபிருல்லாஹ் என அடிக்கடி மொழிந்து பாவ மீட்சி பெறுதலின் முக்கியத்துவத்தையும் விளக்குகின்றார்கள்.
அதுபோன்று “மறப்போம் மன்னிப்போம்”
எனும் தலைப்பில் “
மன்னிக்கும் பாங்கு இறை விசுவாசிகளின் முக்கியமான பண்பு” என்பதனையும் அல்குர்ஆனிய விளக்கத்தோடு கூறி இருக்கும் உஸ்தாத் அவர்கள், “நாவைப்
பேணாமையின் விபரீதத்தையும் எச்சரிக்கிறார்கள்.
“அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவது போலவே, அவனது அடியார்களுக்கும் நாம் நன்றி பாராட்ட கடமைப்பட்டிருக்கிறோம். என “நன்றி மறவோம்” என்ற தலைப்பில் அழகாக குறிப்பிடுகிறார்கள்.
சகோதர உறவைப் பேணிக் கொள்வது , ஈருலக வெற்றியான பொறுமை காப்பது,
அவசரமின்றி எதிலும் நிதானத்தை மேற்கொள்வது, அனைவரிடமும் மென்மையாக நடந்து கொள்வது,
நமது தாய் பண்பான அன்பை அடிப்படையாகக் கொண்டு வாழ்வது,
நேர காலங்களின் முக்கியத்துவம், போன்ற அழகிய வாழ்வியல் தத்துவங்கள் இந்த நூலில் தொடராக கோர்க்கப்பட்டிருக்கின்றன.
“அஜ்னபி_ மஹ்ரமி வரையறை பேணப்படுவது ,பெண் இத்தாவில் இருக்கும் போது மட்டும் தான்” என்ற நிலை ஏற்பட்டிருப்பது கவலை தருகிறது.
என அந்தத் தலைப்பில் நான்கு பக்கங்களில் விளக்கி இருக்கும் அம்சங்கள் இன்றைய காலத்துக்கு மிகத் தேவை என்பதை உணர்த்துகின்றது.
“தூக்கம் ஓர் அருள்; ஓர் அமல்” என்றதலைப்பில் விளக்கமளித்து,
” அதிக தூக்கம் ஆபத்தானது” என்ற தலைப்பில் எச்சரிக்கிறார்கள்.
“ஒரு இலட்சிய பெண்ணின் வாழ்வும் மறைவும்”
என்ற பாடம் நம் சமூகத்திலும் பல இலட்சியத் தாய்மார்களை நிச்சயம் உருவாக்கும் .
தொழுகையில் மறதியா?, உங்களது துஆக்களுக்கு பதில் கிடைக்க வேண்டுமா? இது ஒரு சுவனத்து புதையல், முஹாஸபா எனும் சுய விசாரணை, இறுதி முடிவு நல்ல முடிவாக அமைய வேண்டுமா?
என்ற தலைப்புக்களில் உள்ள விடயங்களை மீண்டும் மீண்டும் வாசித்து மீட்டிக் கொள்வது அவசியம்.
இறுதி முத்தாய்ப்பாக “இன்னும் நூறு ஆண்டுகளின் பின் என்ற பாடம் நமக்கு உணர்த்துவது என்ன என்பதை சிந்திப்போமானால்…
“இவ்வுலக வாழ்வின் அற்ப நிலை” நம் அனைவருக்கும் புரிந்து விடும்.
எதைப் பேசுவது, எதை விடுவது என்று புரியவில்லை எல்லா தலைப்பையும் பேசிக்கொண்டே செல்லலாம் போல் உள்ளது. இங்கு அது முடியாதல்லவா?
இந்த நூலை வாங்கி குடும்பத்தவரோடு சேர்ந்து படித்து பாருங்கள், உங்கள் வீடுகளில் உள்ள புத்தக அலுமாரிகளில் இந்த நல்ல நூலை எதிர்கால சந்ததியினருக்காக சேமித்து வைத்து கொள்ளுவது இந்த நூல் எழுதப்பட்ட நோக்கம் நிறைவேற ஏதுவாக இருக்கும்.
எமது உஸ்தாத் அவர்கள் கூறுவது போன்று நீதி ,தூய்மை, வாய்மை ஓங்கப்பெற்ற அழகான தார்மீக சமுதாயம் தோற்றுவிக்க , ஆன்மீக வங்குரோத்து வறுமை நீங்க, சமுதாய பண்பாடு ஒழுக்கம் தட்டி எழுப்பப்பட, உளவியல் மன அழுத்த பிரச்சனைகளுக்கு சிறந்த ஆன்மீக நிவாரணியாக…
நம்மை மேம்படுத்த இந்த நூலின் ஒவ்வொரு பக்கங்களும் நமக்கு நிச்சயம் துணை புரியும்.
நமது மதிப்பிற்குரிய நூலாசிரியர் உஸ்தாத் அவர்கள் நோய் நொடியற்ற நீண்ட ஆயுளுடன் மேலும் மேலும் இப்படியான நல்ல நூல்களை நம் சமுதாயத்துக்கு வழங்க வேண்டும் என இறைவனை பிராத்திப்போம்.
ஏ.எஸ் சித்தி மிஸ்ரியா அமீன்.
கிண்ணியா.
06.01.2025









