News

மொபைல் தொலைபேசியை சார்ஜ் செய்யும் ஏற்பட்ட மின்கசிவில் வீடு தீப்புடித்து எரிந்து பாரிய சேதம் #இலங்கை

சீகிரியா, கலகொடுவ பகுதியில் கையடக்கத் தொலைபேசியை மின்னேற்றிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட மின் கசிவு காரணமாக வீடொன்று தீப்பிடித்து எரிந்ததில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இச்சம்பவத்தில் எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை என்ற போதிலும், இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவி ஒருவரின் அறை முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவி கல்வி கற்கும் அறையில் கையடக்கத் தொலைபேசி மின்னேற்றத்திற்காக வைக்கப்பட்டிருந்த போதே இத்தீ பரவியுள்ளது. இதனால் மாணவியின் புத்தகங்கள் மற்றும் ஆடைகள் அனைத்தும் சில நிமிடங்களில் தீக்கிரையாகியுள்ளன.

கடந்த 6ஆம் திகதி இரவு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வந்த இரண்டு ஓட்டுநர்களுக்குத் தங்குமிடம் வழங்குவதற்காக, மாணவியின் தாய் அருகிலுள்ள மற்றொரு வீட்டிற்கு அவர்களை அழைத்துச் சென்றுள்ளார். இதன்போது இரவு 10 மணியளவில் திடீரென வீட்டில் தீ பரவியதாகக் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதி மக்கள், பொலிஸார் மற்றும் தம்புள்ளை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போதிலும், வீட்டிற்கும் மாணவியின் கற்றல் உபகரணங்களுக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

சம்பவம் குறித்து மாணவியின் தாய் கருத்துத் தெரிவிக்கையில், “அன்று மாலை மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. மின்சாரம் வந்ததும் லேப்டொப் மற்றும் கையடக்கத் தொலைபேசியை மேசைக்கு மேல் வைத்து சார்ஜ் செய்யப் போட்டுவிட்டு பக்கத்து வீட்டிற்குச் சென்றேன். சில மணிநேரங்களில் எல்லாம் எரிந்து சாம்பலாகிவிட்டது” எனத் தெரிவித்தார்.

கையடக்கத் தொலைபேசி மின்னேற்றப்படும் போது ஏற்பட்ட மின் கசிவே தீ விபத்திற்குக் காரணம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். வீட்டின் வேறு எந்தப் பகுதியிலிருந்தும் தீ பரவவில்லை என்பதை அவதானித்துள்ள பொலிஸார், சீகிரியா பொலிஸாருடன் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button