மனைவி, பிள்ளைகளுக்கான பராமரிப்புச் செலவை வழங்காததற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நபரிடம் 5000 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் காதி நீதிபதி கைது #வாழைச்சேனை

வாழைச்சேனை கோரளைப்பற்று (மத்திய) காதி நீதிமன்றத்தின் மற்றும் பொலன்னறுவை (பதில்) காதி நீதிபதியாகக் கடமையாற்றும் ஒருவர் 5000 ரூபாய் கையூட்டுப்பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓட்டமாவடி பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டிற்கு அமைய இந்த கைது நடவடிக்கை நேற்று கையூட்டு மற்று ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முறைப்பாட்டாளரின் சட்டபூர்வமான மனைவி, பிள்ளைகளுக்கான பராமரிப்புச் செலவைக் கோரித் தாக்கல் செய்த வழக்கின் கீழ், பராமரிப்புப் பணம் வழங்காதமை தொடர்பில் நீதவான் நீதிமன்றினால் முறைப்பாட்டாளருக்கு எதிராகப் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
குறித்த பிடியாணையை ரத்துச் செய்து கொள்வதற்காக, சந்தேகநபரான நீதிபதியினால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட பராமரிப்பு வழக்கிற்குரிய விரிவான அறிக்கையின் சான்றளிக்கப்பட்ட பிரதி ஒன்றைப் பெற்றுக்கொடுப்பதற்குப் பதிலாக, ரூபா 5,000 பணத்தை கையூட்டாகக் கோரிப் பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



