சர்வதேச சிலம்பப் போட்டியில் கந்தளாய் மாணவி சாதனை: 2 தங்கம், 1 வெள்ளி – கீஷனா கந்தளாய்க்கு பெருமை!

சர்வதேச சிலம்பப் போட்டியில் கந்தளாய் மாணவி சாதனை: 2 தங்கம், 1 வெள்ளி – கீஷனா கந்தளாய்க்கு பெருமை!
பெங்களூர் நகரில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் ஒன்பது நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் இலங்கைக்கும், குறிப்பாக கந்தளாய் மண்ணிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் திருகோணமலை கந்தளாய் பேராறு தி/பரமேஸ்வரா வித்தியாலயத்தின் 14 வயதுடைய மாணவி செல்வி சாந்தரூபன் கீஷனா அபார வெற்றி பெற்றுள்ளார்.
கடுமையான போட்டிகளுக்கு மத்தியில் தனது திறமையும் தன்னம்பிக்கையும் வெளிப்படுத்திய கீஷனா, மூன்று பிரிவுகளில் பதக்கங்களை வென்று சர்வதேச அரங்கில் அசத்தியுள்ளார்.
குறித்த மாணவி கீஷனாவின் சாதனைகள்:
இரட்டை வாள் சுருள் – தங்கப் பதக்கம் 🥇
ஒற்றை வாள் சுருள் – தங்கப் பதக்கம் 🥇
மான் கொம்பு ஆட்டத்தில் – வெள்ளிப் பதக்கம் 🥈
பழமை வாய்ந்த தமிழர் தற்காப்புக் கலையான சிலம்பாட்டத்தில் முறையாகப் பயிற்சி பெற்று வந்த கீஷனா, தனது அசத்தலான வரிசைகளால் நடுவர்களை வியக்க வைத்தார்.
சர்வதேச மேடையில் ஈழத்து மாணவியின் இந்தச் சாதனை ஒட்டுமொத்த இலங்கைக்கும் பெருமிதத்தை அளித்துள்ளது. கந்தளாய் பேராறு தி/பரமேஸ்வரா வித்தியாலயத்தின் பெருமையை உலக அரங்கிற்கு கொண்டு சென்ற கீஷனாவை, பாடசாலை சமூகமும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் கந்தளாய் மக்களும் பாராட்டி வருகின்றனர்.
சர்வதேச பதக்கங்களுடன் நாடு திரும்பியுள்ள கீஷனா, எதிர்கால இளம் வீரர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறார்.







