டிட்வா கொடுப்பனவுகள் வழங்குவதில் இழுபறி ..

“டிட்வா” (Ditwa) சூறாவளி நிலைமையால் வீடுகள் சேதமடைந்தவர்கள், வாடகைக்கு வீடுகளைக் கண்டுபிடிப்பதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரியவந்துள்ளது.
டிட்வா சூறாவளி காரணமாக 6,198 வீடுகள் முழுமையாகவும், 112,638 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக இதுவரை பதிவாகியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் வாடகை வீட்டு கொடுப்பனவைப் பெறுவதற்கு 8,998 பேர் தகுதி பெற்றுள்ளதாகவும், எனினும் வாடகைக்கு வீடுகளைக் கண்டுபிடிப்பதில் உள்ள சிக்கல் காரணமாக அந்தச் செயல்முறை சற்று தாமதமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (அனர்த்த முகாமைத்துவம்) கே.ஜி. தர்மதிலக தெரிவித்தார்.
வாடகை வீட்டு கொடுப்பனவைப் பெறுவதற்கு தகுதி பெற்றவர்களில் 1,018 குடும்பங்கள் ஏற்கனவே வாடகை வீடுகளில் குடியேறியுள்ளதாகவும், அதன் முன்னேற்றம் 11.3 சதவீதமாகும் என்றும் மேலதிக செயலாளர் குறிப்பிட்டார்.
முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு தகுதி பெற்றவர்களில் 201 பேருக்கு இதுவரை கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. காணிப் பிரச்சினைகள் போன்ற காரணங்களால் அக்கொடுப்பனவுகள் சற்று தாமதமாகியுள்ளன.
வீடுகள் சேதமடைந்தவர்களில் சொந்தமாக காணி வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் முதற்கட்ட தவணை வழங்கப்படும். வீடு கட்டுவதற்கு பொருத்தமான காணி அடையாளம் காணப்பட்டிருந்தால், அவர்களுக்கு இக்கொடுப்பனவு வழங்கப்படும். குறிப்பாக முழுமையாக சேதமடைந்த வீடுகளைக் கொண்டவர்களுக்கு சொந்தக் காணி இருக்கும் பட்சத்தில் 20 இலட்சம் ரூபாய் முதற்கட்ட தவணையாக வழங்கப்படும். காணி இல்லாதவர்களுக்கு அரசாங்கக் காணியொன்றை வழங்கி 20 இலட்சம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அல்லது வீடுடன் கூடிய காணியொன்றை வாங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்காக 50 இலட்சம் ரூபாய் கொடுப்பனவை ஒரே தடவையில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.
அல்லது பகுதியளவில் கட்டப்பட்ட வீடுடன் கூடிய காணியை வாங்கி, எஞ்சிய பகுதியை கட்டி முடிப்பதற்கு ஏனைய தவணைப் பணத்தை வழங்கும் திட்டமும் நடைமுறையில் உள்ளதாக மேலதிக செயலாளர் தெரிவித்தார்.
முழுமையாக மற்றும் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளை புனரமைப்பதற்காக 25 மாவட்டங்களுக்கும் 41.6 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மீள்குடியேற்றத் திட்டத்திற்காக 2.1 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.



