உங்களுக்கு 10 நாள் தான் காலக்கெடு – உடன்படிக்கைக்கு இணங்காவிட்டால், மிக மோசமான விளைவுகளைச் சந்திப்பீர்கள் என ஈரானுக்கு டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரானின் அணுசக்தி வேலைத்திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடன் புதிய உடன்படிக்கைக்கு வருமாறு அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாஷிங்டனில் நடைபெற்ற அமைதிப் பேரவையின் முதலாவது கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஈரான் புதிய உடன்படிக்கைக்கு இணங்காவிட்டால், “மிகவும் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார். ஈரான் மீதான இராணுவத் தாக்குதலைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை செய்து வரும் அவர், இதற்காக ஈரானுக்கு 10 முதல் 15 நாட்கள் வரை கால அவகாசம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “அடுத்த 10 நாட்களில் நீங்கள் இது குறித்துப் பல செய்திகளைக் கேள்விப்படுவீர்கள். அந்த கால அவகாசம் அவர்களுக்கு போதுமானது என்று நான் நினைக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் இந்த அச்சுறுத்தலுக்கு ஈரான் தரப்பிலிருந்தும் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தினால், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸிற்கு ஈரான் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் பின்வரும் விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன:
ஈரான் ஒருபோதும் தன்னிச்சையாகப் போரைத் தொடங்காது.
ஆனால், ஈரான் மீது இராணுவ ஆக்கிரமிப்பு அல்லது தாக்குதல் நடத்தப்பட்டால், தற்காப்புக்காகப் பதில் தாக்குதல் நடத்த தங்களுக்கு உரிமை உண்டு.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்று வருவதாக ஜனாதிபதி ட்ரம்ப் முன்னர் தெரிவித்திருந்த போதிலும், தற்போது இந்த காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளமை சர்வதேச ரீதியாகப் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.



