News

இன்று என்னால் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக முடியாது ; மைத்திரி விக்ரமசிங்க அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவியான முன்னாள் முதல் பெண்மணி மைத்திரி விக்ரமசிங்க, இன்று (பெப்ரவரி 20) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக முடியாது என அறிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி தொடர்பான விசாரணை ஒன்றில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அங்கு முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்தார்.

மைத்திரி விக்ரமசிங்க சமூகமளிக்காததற்கான உத்தியோகபூர்வக் காரணம் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என்றபோதிலும், உடல்நல காரணங்களினால் அவரால் சமூகமளிக்க முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரமசிங்கவுக்கு விடுக்கப்பட்ட இந்த அறிவித்தல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் பெப்ரவரி 18ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் 2023ஆம் ஆண்டு பிரித்தானிய விஜயம் தொடர்பான விசாரணைகள் நிமித்தம், மைத்திரி விக்ரமசிங்க இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகவிருந்தார்.

2023ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பிரித்தானியாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது சுமார் 16.9 மில்லியன் ரூபா அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2025 ஓகஸ்ட் மாதம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.

அவர் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் செல்வதற்கு அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக அந்த முறைப்பாட்டில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button