பௌத்த மதத்திற்கும் தேசத்திற்கும் இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக மகா சங்கத்தினர் கொழும்பிற்கு வருகை தந்துள்ளமையை வரவேற்கிறேன் – தேரர்களின் முயற்சிக்குத் எனது கௌரவத்தை தெரிவிக்கிறேன் ; திஸ்ஸ குட்டியாராச்சி

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அவர்கள் மக்கள் நலனுக்காக அன்றி, தனது தனிப்பட்ட அரசியல் குரோதங்களை தீர்த்துக்கொள்வதற்காகவே அரசியலில் ஈடுபட்டு வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்.
பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இன்றைய தினம் (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சரத் பொன்சேகா வெளியிடும் கருத்துக்கள் அவரது மட்டத்தில் உள்ள ஒரு சிலருக்கு வினோதமாகத் தெரிந்தாலும், நாட்டின் புத்திசாலித்தனமான ஒட்டுமொத்த குடிமக்களும் அதனை அருவருப்புடனேயே நோக்குகின்றனர் என்றும், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர அன்றைய சேனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் பணியாற்றிய முன்னாள் இராணுவத் தளபதி என்ற கௌரவத்தை மட்டுமே அவருக்கு வழங்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து மேலும் கருத்து வெளியிட்ட குட்டியாராச்சி, 76 வருட சாபத்தைப் பற்றிப் பேசி ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அணி, இன்று நாட்டுக்கு எவ்வித நன்மைகளையும் செய்யவில்லை எனக் குற்றம் சாட்டினார்.
தேர்தலுக்கு முன்னர் ஊழல் மற்றும் மோசடிகளை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தபோதிலும், இன்று நிலக்கரி கொள்வனவு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் பாரிய மோசடிகள் இடம்பெற்று வருவதாகவும், அதனை மூடிமறைக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், கடந்த அரசாங்கங்கள் முன்னெடுத்த அபிவிருத்தித் திட்டங்களைத் தவிர்த்து, இதுவரை ஒரு புதிய மின் உற்பத்தி நிலையமோ அல்லது ஒரு அதிவேக நெடுஞ்சாலையோ இந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்படவில்லை எனவும் அவர் சாடினார்.
நாட்டின் கல்வித் துறையில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப நிலை குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், முதலாம் மற்றும் ஆறாம் தரங்களுக்கான புதிய பாடத்திட்ட தொகுதிகள் (Modules) குறித்து ஆசிரியர்களுக்கே போதிய தெளிவில்லை என்றும், இது தொடர்பில் கல்வி அமைச்சரோ அல்லது அமைச்சின் செயலாளரோ பொறுப்புக்கூற முன்வருவதில்லை என்றும் தெரிவித்தார்.
இதேவேளை, ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி யார் என்பதை தற்போதைய அரசாங்கத்திடம் கர்தினால் அவர்கள் ஏன் இன்னும் வினவவில்லை எனக் கேள்வி எழுப்பிய அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்காக கர்தினால் மௌனம் கலைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும், பௌத்த மதத்திற்கும் தேசத்திற்கும் இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக மகா சங்கத்தினர் கொழும்பிற்கு வருகை தந்துள்ளமையை வரவேற்ற அவர், அரசாங்கத்தை சரியான பாதைக்குக் கொண்டுவரத் தார்மீக ரீதியாக முன்வந்துள்ள தேரர்களின் முயற்சிக்குத் தனது கௌரவத்தை தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.
இளைஞர்களின் எதிர்காலம் மற்றும் நாட்டின் பொருளாதார முதலீடுகள் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவதானம் செலுத்த வேண்டும் எனவும், பொய் வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றுவதை நிறுத்த வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.


