நாடாளுமன்றம் தேவையில்லை என்றும் ஜனாதிபதியிடமே ஆட்சியை ஒப்படைக்கப் போகின்றார்களோ என்றும் எனக்கு சந்தேகம் எழுந்துள்ளது ; தாஹிர் MP

நாடாளுமன்றம் தேவையில்லை என ஜனாதிபதியிடம் ஆட்சியை ஒப்படைக்கப் போகின்றார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. எம். தாஹிர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
நாங்கள் சிறுபான்மைச் சமூகத்தின் ஊடாக இங்கே வருகை தந்திருப்பது, எங்களுடைய மக்களுடைய பிரச்சினைகளை இந்த அவையிலே கூறி, அதற்கான ஒரு திட்டங்களைப் பெற்று அந்த மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்கே தவிர, நாங்கள் எதிர்க்கட்சியினுடைய வரிசையிலே இருப்பதற்காக வேண்டி எங்களையும் சேர்த்து நீங்கள் பழிதீர்த்துவிடக் கூடாது.
எதை எடுத்தாலும் எங்களுடைய ஜனாதிபதி செய்திருக்கின்றார், எங்களுடைய ஜனாதிபதி செய்கின்றார் என்று கூறுகின்ற விடயத்தையே பார்க்க முடிகின்றது.
மாகாண சபை தேவையில்லை என்கின்ற ஒரு நிலைப்பாட்டில் இருக்கின்ற நீங்கள், எதிர்காலத்திலே நாடாளுமன்றம் ஒன்றும் தேவையில்லை என்று தனியொரு ஜனாதிபதியிடத்திலே இந்த ஆட்சியை கொடுத்துவிட்டுச் செல்கின்ற நோக்கில் இருக்கின்றீர்களா என்று கூட சிந்திக்கத்தோன்றுகின்றது.
எனவே இவ்வாறான ஒரு சூழலிலே எங்களுடைய பிரதேசத்தில் இருக்கின்ற பிரச்சினைகளை முன்வைத்துள்ளோம்..
பல தடவைகள் எங்களுடைய பிரதேசங்களில் இருக்கின்ற பிரச்சினைகளை நாங்கள் கூறினாலும் எதுவுமே நடைமுறைப்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்தார்.



