நிலக்கரியின் தரத்தை அறிந்துகொள்வதைத் தடுப்பதற்காக அரசாங்கம் ஆய்வக அறிக்கைகளை கூட நிறுத்த முயற்சி செய்தமை அம்பலம் !!

தரம் குறைந்த நிலக்கரியை நாட்டிற்கு இறக்குமதி செய்ததன் மூலம் ஏற்பட்டுள்ள நஷ்டமானது, 40 வருட காலப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை செலுத்துவதற்குத் தேவையான தொகைக்கு சமமானது என முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது.
அந்தக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போது, இந்த நிலக்கரியின் தரத்தை அறிந்துகொள்வதைத் தடுப்பதற்காக அரசாங்கம் ஆய்வக அறிக்கைகளை கூட நிறுத்த முயற்சி செய்ததாகக் குறிப்பிட்டார்.
நொரோச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்காக இந்திய நிறுவனம் ஒன்றின் ஊடாக இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி முறையான தரத்தைக் கொண்டிருக்கவில்லை என வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, அது தொடர்பில் கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில், இலங்கை மின்சார சபையினால் நாடாளுமன்றத்தின் உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு அண்மையில் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.
தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள 8 கப்பல்களிலுள்ள நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் போது மதிப்பிடப்பட்ட நேரடி நஷ்டம் அந்த கடிதத்தில் தனித்தனியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


