மகா சங்கத்தினர் மீது கை வைக்க வராதீர்கள்… மகா சங்கத்தினரை சில அமைச்சர்கள் காட்டுமிராண்டிகள் என அழைக்கின்றனர்- மகா சங்கத்தினரை அவமானப்படுத்துபவர்களுக்கு எதிராக மக்கள் முன்வர வேண்டும் ; சஜித் வேண்டுகோள்

தென்னாப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 8 நிலக்கரி கப்பல்களும் தரம் குறைந்தவை என்று சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், 9 ஆவது நிலக்கரி கப்பலும் தரம் குறைந்தது என்று தரவுகளோடு பதிவாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஹோமாகம ஸ்ரீ கல்யாணதர்ம அபினவாராம விகாரையில் போதி மரத்தை சுற்றி அமைக்கப்பட்ட தங்க சுற்று வேலியை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (23) கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
மின் உற்பத்தி நிலையத்தின் எரிப்பு பதிவேடுகள் மற்றும் ஒரு மின் அலகு உற்பத்திக்கு கிலோவாட் மணிக்கு தேவையான நிலக்கரியின் கிலோகிராம் அளவு ஆகியவற்றின்படியும், நுரைச்சோலை மின் நிலையம் 900 மெகாவோட்ஸ் உற்பத்தி செய்கிறது என்ற பதிவுகளின்படியும், 300 மெகாவோட்ஸ் கொண்ட முதல் மற்றும் மூன்றாவது அலகுகளின் தரவுகளின் அடிப்படையிலும் தென்னாப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 9ஆவது நிலக்கரிக் கப்பலும் தரம் குறைந்தது என்று உறுதியாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
முதல் அலகில் 250 மெகாவாட்ஸ்ஸும், மூன்றாவது அலகில் 275 மெகாவாட்ஸ்ஸுடும் உற்பத்தியாகியுள்ளது என்றும், இது 300 மெகாவாட்ஸ்ஸாக அமைந்திருக்க வேண்டும் என்றும், இரண்டாவது அலகில் மட்டும் சரியாக 300 மெகாவாட்ஸ் உற்பத்தியாகியுள்ளது என்றும், அதற்கு காரணம் அந்த அலகில் ரஷ்யாவிலிருந்து கொண்டு வரப்பட்ட உயர்தர நிலக்கரி பயன்படுத்தப்பட்டதே என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த அரசாங்கம் 25 முதல் 27 கப்பல்கள் வரை தென்னாப்பிரிக்காவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்துள்ளது என்றும், ஆனால் இந்த நிலக்கரி தரம் குறைந்தவை என்று சாட்சிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், நிகழ்நேர பதிவுகளின்படி நிலக்கரி மூலம் பாரதூரமான ஊழல் நடைபெற்றுள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
மகா சங்க ரத்னத்திற்கு “காட்டுமிராண்டி ” என்று அவமதிக்கும் இந்த அரசாங்கம், கேடு கெட்டவனையைம் தாண்டி நிலக்கரி மூலம் நடத்தும் ஊழல் மற்றும் மோசடியினால் மக்களுக்கு மிகவும் பாரதூரமான பாதிப்பே ஏற்படுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.
சம்புத்த சாசனத்தின் காவல் தெய்வங்களாக விளங்கும் மகா சங்கத்தினருக்கு எதிராக ஏவப்படும் பல்வேறு வகையான அச்சுறுத்தல்கள், சக்திகள், தாக்குதல்கள் மற்றும் சவால்கள் அனைத்தையும் முறியடித்து, எமது கௌரவத்திற்குரிய, வழிபாட்டிற்குரிய, அதிபூஜய மகா சங்கத்தினரை இந்தத் தாக்குதல்கள் மற்றும் சவால்களிலிருந்து பாதுகாக்க வேண்டிய காலம் இன்று கனிந்துள்ளது.
குறிப்பாக எமது மகா சங்கத்தினரை சில அமைச்சர்கள் ‘வனசாரிகள்’ (காட்டுமிராண்டிகள்) என அழைக்கின்றனர். அதேபோல் ‘சிவரதாரிகளுக்கும்’ (துறவிகளுக்கும்) ஏனைய மதத் தலைவர்களுக்கும் ‘புரூஸ் லீ’ பாணி தாக்குதல்களை நடத்த வேண்டும் என்ற விடயத்தை இவர்கள் ஆங்காங்கே தெரிவித்துள்ளனர்.
புரூஸ் லீயின் கராத்தே போட்டிகளில் அவரது செயற்பாடுகளைக் காட்ட முடியும். ஆனால் அத்தகைய செயற்பாடுகளை எமது நாட்டு மகா சங்கத்தினர் மீதோ, மதகுருமார் மீதோ அல்லது ஏனைய மதத் தலைவர்கள் மீதோ பிரயோகிக்க முற்படுவதும், அது குறித்துப் பேசுவதும் மிகவும் அநாகரீகமான கூற்றாகவே நான் கருதுகிறேன்.
இவ்வாறான அநாகரீகமான, ஒழுக்கமற்ற கூற்றுகள் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதேபோல் மகா சங்கத்தினரை ‘வனசாரிகள்’ எனக் கூறி, ‘புரூஸ் லீ’ பாணி தாக்குதல்களை நடத்த முயற்சிக்கும் அந்த அமைச்சர்களுக்கு நாங்கள் கூற விரும்புவது யாதெனில், மகா சங்கத்தினர் மீது கை வைக்க வராதீர்கள். சம்புத்த சாசனத்தின் மீது கை வைக்க வராதீர்கள். எமது அரசியலமைப்பின் உன்னதமான சட்டத்தின் கீழ் எமது சம்புத்த சாசனம் பாதுகாப்பானது.
உன்னதமான சட்டத்தின் கீழ் நாம் செய்ய வேண்டியது பௌத்த மதத்தை மேம்படுத்துவதாகும். அதேபோல் ஏனைய மதங்களுக்கும் அந்த சுதந்திரம், உரிமை மற்றும் கலாசாரங்களைப் பாதுகாக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகும். அதன் மூலமே தேசிய நல்லிணக்கம், ஒற்றுமை, நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் நாட்டின் ஏக்கியத்தன்மை (ஒற்றையாட்சி) உறுதிப்படுத்தப்படும்.
நீங்கள் வெளியிடும் இவ்வாறான தவறான கூற்றுகளினால் நாட்டுக்குள் ஒற்றுமையின்மை, குரோதம் மற்றும் வெறுப்புணர்வு தூண்டப்படுகிறது. எனவே அரசாங்கத்தின் பொறுப்புள்ள அமைச்சர்கள் நாட்டைப் பிளவுபடுத்த அல்ல, நாட்டை ஒன்றிணைக்கவே பேச வேண்டும், செயற்பட வேண்டும்.
இலங்கை ஒரு மதச்சார்பற்ற நாடு அல்ல. எமது நாட்டுக்குள் பல்வேறு மதங்களைப் பின்பற்றும் பல்வேறு இன மக்கள் வாழ்கின்றனர். இந்த அனைத்து மதங்களிலுமுள்ள நற்பண்புகளைப் பயன்படுத்தி ஒழுக்கமான, நீதியான, நாகரீகமான நாட்டை நாம் கட்டியெழுப்ப வேண்டும். ஏனைய மதங்கள், ஏனைய இனக்குழுக்கள், ஏனைய கலாசாரங்கள் மற்றும் ஏனைய இனங்களைப் பாதுகாத்து நாட்டை ஒன்றிணைக்கும் வேலைத்திட்டத்திற்காக நாம் பேதமின்றி முன்னோக்கிச் செல்வோம். நாட்டைப் பிளவுபடுத்தும், மகா சங்கத்தினரை அவமதிக்கும், ஏனைய மதத் தலைவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் இவ்வாறான கூற்றுகள் மற்றும் செயல்களிலிருந்து உடனடியாகத் தவிர்ந்து கொள்ளுமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம் என சஜித் மேலும் தெரிவித்தார்



