தரம் குறைந்த நிலக்கரி காரணமாக, எதிர்காலத்தில் மின் உற்பத்தி நிலையத்தின் இயந்திரங்களுக்கு பாரிய சேதங்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை !!

“நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்கு தற்போது இறக்குமதி செய்யப்படும் தரம் குறைந்த நிலக்கரி காரணமாக, எதிர்காலத்தில் மின் உற்பத்தி நிலையத்தின் இயந்திரங்களுக்கு பாரிய சேதங்கள் ஏற்படக்கூடும் என்றும், நாடு முழுவதும் இருளில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாகவும் எரிசக்தி ஆய்வாளர் விதுர ரளபனாவ தெரிவித்துள்ளார்.
தற்போது நுரைச்சோலை வளாகத்தில் ஒன்பதாவது நிலக்கரி கப்பலை இறக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அந்த நிலக்கரியின் தரம் மிகவும் குறைந்த மட்டத்தில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலக்கரி விநியோகம் இந்தியாவின் ‘ட்ரைடென்ட் கெம்பர்’ (Trident Kemper) என்ற நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படுகிறது. தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்தமை தொடர்பில் முதல் கப்பலுக்கு மாத்திரம் 640 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒட்டுமொத்தமாக நுகர்வோருக்கும் அரசாங்கத்திற்கும் சுமார் 1300 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
முதல் கப்பலில் தரம் குறைபாடு உறுதி செய்யப்பட்ட போதிலும், அதற்குப் பிறகு வந்த ஐந்து கப்பல்களின் அறிக்கைகள் தரமானவை என சமர்ப்பிக்கப்பட்டிருப்பது பாரிய பிரச்சினையாகும் என ரளபனாவ கூறுகிறார். மூன்று, நான்கு மற்றும் ஐந்தாவது கப்பல்களின் நிலக்கரி முதல் கப்பலை விட தரம் குறைந்தவை என்பதற்கான சான்றுகள் இருந்தும், அந்த அறிக்கைகள் எவ்வாறு ‘தேர்ச்சி’ (Pass) பெற்றன என்பது குறித்து அதிகாரிகள் இதுவரை விசாரணை நடத்தவில்லை.
தரம் குறைந்த நிலக்கரியைப் பயன்படுத்துவது, நவீன வாகனமொன்றுக்குத் தேவையான ஒக்டேன் (Octane) அளவை விடக் குறைவான எரிபொருளைப் பயன்படுத்துவதற்கு ஒப்பானது என உதாரணம் காட்டிய அவர், இதன் மூலம் இயந்திரங்களுக்குத் தேவையான சக்தியை உற்பத்தி செய்ய முடியாமல் போவதுடன் இயந்திரத்திற்கும் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிவித்தார்.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் இயந்திரங்கள் இவ்வாறு தரம் குறைந்த நிலக்கரியைக் கொண்டு தொடர்ந்து இயக்கப்பட்டால், முழு மின்சாரத் திறனை உற்பத்தி செய்ய முடியாமல் போதல், இயந்திரங்களுக்கு கடும் சேதம் ஏற்படுதல் மற்றும் குறிப்பாக கொதிகலன் குழாய்கள் (Boiler tubes) வெடித்தால், அந்த இயந்திரத்தை வழமைக்குக் கொண்டு வர குறைந்தது இரண்டு வாரங்கள் முதல் ஆறு மாதங்கள் வரை காலம் எடுக்கலாம்.
தற்போது நிலவும் வறட்சியான வானிலையுடன் நீர்மின் உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டு அல்லது மூன்று இயந்திரங்கள் இவ்வாறு செயலிழந்தால், இலங்கையின் முழு மின் கட்டமைப்பும் பாரிய நெருக்கடிக்குள்ளாகும் என ரளபனாவ வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், டெண்டர் (Tender) நிபந்தனைகளின்படி தரம் குறைந்த நிலக்கரியை வழங்கும் விநியோகஸ்தரின் ஒப்பந்தத்தை இரத்துச் செய்ய வாய்ப்பு இருந்தபோதிலும், இலங்கை மின்சார சபை அல்லது எரிசக்தி அமைச்சு இது குறித்து இதுவரை முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.”



