News

இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியால் ஒருவேளை நட்டம் ஏற்பட்டால் அதனை விநியோகத்தர்களே செலுத்த நேரிடும் – இது எந்த வகையிலும் இதனை மக்கள் மீது சுமத்தப் பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்தது

நிலக்கரி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக நிபுணர்களை உள்ளடக்கிய குழுவொன்றை நியமிக்க வலுசக்தி அமைச்சின் செயலாளர் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.


இன்று (24) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். இதற்காக மொரட்டுவை பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவொன்றை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


இதன்போது அமைச்சர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:


கொள்வனவு நடைமுறையில் எவ்வித சிக்கலும் இல்லை!

இது ஒரு முறையான கொள்வனவு நடைமுறையூடாகவே மேற்கொள்ளப்பட்டது. இந்தச் செயன்முறையில் நிலக்கரியை கப்பலில் ஏற்றும் துறைமுகத்தில் வைத்து ஒரு அறிக்கை பெறப்படும். அதுவும் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுகூடத்திலிருந்தே பெறப்படும். அந்த அறிக்கையின்படி 5900 கிலோ கலரியை விட அதிகமாக இருந்தால் மட்டுமே இலங்கை அதனைப் பொறுப்பேற்கும். இதற்கமைவாக இன்று வரை 10 கப்பல்கள் வந்துள்ளன. அந்த 10 கப்பல்களின் லோட் போர்ட் அறிக்கையிலும் நிலக்கரியின் தரம் 5900 கிலோ கலரியை விட அதிகமாகவே இருந்தது. 5900க்குக் குறைவாக இருந்தால் நாம் பொறுப்பேற்க மாட்டோம்.


கப்பலிலிருந்து இலங்கையில் இறக்கப்பட்ட பின்னரும் ஒரு அறிக்கை பெறப்படும். அதுவும் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுகூடத்திலிருந்தே பெறப்படும். அந்த ஆய்வுகூடமும் கொள்வனவு நடைமுறையூடாகவே தெரிவு செய்யப்பட்ட நிறுவனம் ஆகும். இந்த நிலக்கரியை இறக்கிய பின்னர் அங்கிருந்து பெறப்படும் அறிக்கையில், கிலோ கலரி அளவு 5900ஐ விடக் குறைவாக இருந்தால் இரண்டு மடங்கு அபராதம் அறவிடப்படும். 5900 தொடக்கம் 6100 கிலோ கலரிக்கு இடையில் காணப்பட்டால் ஒரு மடங்கு அபராதம் அறவிடப்படும். இதுதான் செயன்முறை. இதற்குப் புறம்பான எந்த வழியும் இல்லை. எனவே, கொள்வனவு நடைமுறையில் எந்தப் பிரச்சினையும் இல்லை.


6 கப்பல்களின் அறிக்கைகள் கிடைத்துள்ளன

தற்போது வந்துள்ள 10 கப்பல்களில் 8 கப்பல்களின் நிலக்கரி முற்றாக இறக்கப்பட்டுவிட்டது. மீதமுள்ள கப்பலில் நிலக்கரியை இறக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றில் 6 கப்பல்களுக்கான அறிக்கைகள் கிடைத்துள்ளன. முதலாவது கப்பலில் 59,831 மெட்ரிக் தொன் நிலக்கரி காணப்பட்டது. அதில் இருந்த நிலக்கரியின் தரம் குறிப்பிட்ட அளவுக்குக் காணப்படாததால் அபராதம் அறவிடப்பட்டது. அறவிடப்பட்ட தொகை 2.07 மில்லியன் டொலர்கள் ஆகும்.


ஏனைய கப்பல்களில், இரண்டாவது கப்பலுக்கு 436,001 டொலர்களும், மூன்றாவது கப்பலுக்கு 484,929 டொலர்களும், நான்காவது கப்பலுக்கு 345,652 டொலர்களும், ஐந்தாவது கப்பலுக்கு 500,192 டொலர்களும், ஆறாவது கப்பலுக்கு 510,677 டொலர்களும் அபராதமாக அறவிடப்பட்டுள்ளன. எமது தரநிலை அதாவது 5900 தொடக்கம் 6100க்கு இடையில் காணப்படுவதால் அவற்றை நாம் பயன்படுத்துகின்றோம், எனினும் அதற்கிடைப்பட்ட தரத்தில் காணப்படுவதால் ஒரு மடங்கு அபராதம் அறவிடப்பட்டுள்ளது.


அறிக்கையைச் சமர்ப்பிக்க விசேட குழு

இந்த ஆய்வு அறிக்கைகளில் ஏற்படும் தொழில்நுட்ப சிக்கல்கள் தொடர்பாகவும், ஏற்பட்டுள்ள நட்டத்தைக் கணக்கிடுவதற்கும் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்க மொரட்டுவை மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவொன்றை நியமிக்க வலுசக்தி அமைச்சின் செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.


8 கப்பல்கள் வரும்வரை காத்திருந்தது ஏன்?

நிராகரிப்பதற்கான இரண்டு சந்தர்ப்பங்கள் உள்ளன. ஏற்றும் துறைமுகத்திலேயே 5900 கிலோ கலரியை விடக் குறைவாக இருந்தால் முற்றாக நிராகரிக்கப்படும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இலங்கையில் இறக்கிய பின்னர் பரிசோதிக்கும்போது, அந்த அறிக்கைகளில் 5900 கிலோ கலரியை விடக் குறைவாக இருந்தால் அப்போதுதான் இரண்டு மடங்கு அபராதம் அறவிடப்படும். 5900 தொடக்கம் 6100 இற்கு இடையில் இருந்தால் அபராதம் அறவிடப்படும், ஆனால் அதனை நிராகரிக்க வேண்டிய அவசியமில்லை. தற்போது முதலாவது கப்பலில் மாத்திரமே 5900 கிலோ கலரியை விடக் குறைவான தரம் பதிவாகியுள்ளது. அது மட்டுமே நிராகரிக்கப்படும் வகையைச் சார்ந்தது. அவ்வாறான இரண்டு கப்பல்கள் அமைந்தால் மட்டுமே அது குறித்துப் பரிசீலிக்கப்படும். தற்போதுள்ள நிலைமையின்படி முதலாவது கப்பலுக்குப் பின்னர் வந்த கப்பல்களில் அப்படி எதுவும் நிகழவில்லை.


ஏற்றும் துறைமுக அறிக்கைகள் சரியென்றால், இறக்கும் துறைமுக அறிக்கைகள் பிழையானது எப்படி?

அப்படி நிகழலாம். அது பொதுவாக நடக்கும் விடயமே. அது எவ்வாறு நிகழ்ந்திருக்கலாம் என்பது குறித்து மேலும் ஆராய்வதற்காகவே இந்த நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

நட்டம் ஏற்பட்டால் யாரிடமிருந்து அறவிடப்படும்?

இது பில்லியன் கணக்கான ரூபா பெறுமதியான ஒரு கொடுக்கல் வாங்கல். இதில் பங்கேற்ற 10 விநியோகத்தர்களும் டெண்டரைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடனேயே வந்திருப்பார்கள். இதில் ஒருவருக்கு டெண்டர் கிடைத்ததும், ஏனைய 9 பேருக்கும் இந்த வியாபாரத்தில் இணைய முடியாமல் போனமை குறித்துக் கவலை இருக்கலாம்.


தற்போது இலங்கையில் உள்ள நடைமுறையின்படி, நான் முன்பே கூறியது போல, இவ்வளவு கிலோ கலரி குறைந்தால் இரண்டு மடங்கு அபராதம், இவ்வளவு கிலோ கலரி குறைந்தால் ஒரு மடங்கு அபராதம், இவ்வளவு கிலோ கலரி இருந்தால் அபராதம் இல்லை என்பதே பொதுவான நடைமுறை. இதனை விட அதிக நட்டம் ஏற்பட்டுள்ளதா என்பதைக் கணக்கிடவே ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. அது கட்டாயம் விநியோகத்தரிடமிருந்து அறவிடப்படும். விநியோகத்தரின் மேலும் பல கப்பல்கள் குறித்து இவ்வாறான அறிக்கைகள் வருமானால், அதற்குப் பிறகு ஒரு முடிவை எடுக்க நாம் தயாராக உள்ளோம். மின்சக்தி அமைச்சின் ஊடாகவும் நாம் மற்றுமொரு நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறோம்.


மின் கட்டண அதிகரிப்பும், இறக்கப்பட்ட நிலக்கரியின் நிலையும் என்னவாகும்?

எந்த வகையிலும் இதனை மக்கள் மீது சுமத்த வேண்டியதில்லை. இவ்வாறான கொடுக்கல் வாங்கல்களில் நட்டம் விநியோகத்தர் மீதே சுமத்தப்படும். விநியோகத்தர்தான் நட்டத்தை ஏற்க வேண்டும். எந்தவொரு கப்பலின் நிலக்கரியும் பயன்பாட்டிலிருந்து அகற்றப்பட மாட்டாது. அந்தச் செயன்முறையில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதற்குத்தான் தீர்வு காண வேண்டும். வழங்கப்பட்ட காலக்கெடுவுக்கு அமைய மேலும் 15 கப்பல்கள் வரவுள்ளன. இந்த நட்டத்தை மக்கள் மீது சுமத்தும் எந்தவொரு தேவையும் அரசாங்கத்திற்கு இல்லை. மின்சார சபை முன்வைத்துள்ள மின் கட்டண அதிகரிப்பு யோசனைக்கும் இந்த நிலக்கரி விவகாரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அத்துடன் அரசாங்கத்திற்குச் சொந்தமான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவே இறுதியான முடிவை எடுக்கும்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button