நாமல் ராஜபக்சவிடம் மன்னிப்புக் கோரிய ஒக்ஸ்போர்ட் சங்கம் !

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, ஒக்ஸ்போர்ட் சங்கத்தில் (Oxford Union) உரையாற்றவிருந்த நிகழ்வு, பாதுகாப்புக் காரணங்களால் பிறிதொரு திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த விரிவுரையை நடத்த முடியாமல் போனது குறித்து நாமல் ராஜபக்சவிடம் மன்னிப்புக் கோரியுள்ள ஒக்ஸ்போர்ட் சங்கம், அங்கு வருகை தரும் நபர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கோடயே இந்தத் தீர்மானத்தை எடுத்ததாகத் தெரிவித்துள்ளது.
குறித்த தினத்தில் இந்த நிகழ்வை முன்னெடுப்பதில் பாரிய பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு ரீதியான அச்சுறுத்தல்கள் காணப்படுவதாகவும், பெருமளவிலான போராட்டங்கள் மற்றும் இடையூறுகள் ஏற்படக்கூடும் என நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் சங்கம் நாமல் ராஜபக்சவிடம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஒக்ஸ்போர்ட் சங்கத் தலைவரின் அறிவிப்பு
ஒக்ஸ்போர்ட் சங்கத்தின் தலைவர் කැතරින් යැං (Katherine Yang) ராஜபக்ச அவர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
“தற்போதைய அபாய மதிப்பீட்டின்படி, விருந்தினர்கள், பேச்சாளர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை குறித்த இடத்தில் இருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளுக்குள் நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றது. அந்த ஆலோசனைகளின் அடிப்படையிலும், பங்கேற்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதிய எமது பொறுப்பின் காரணமாகவும், இந்த நிகழ்வை பாதுகாப்பாக நடத்தக்கூடிய எதிர்காலத் திகதி வரை ஒத்திவைக்க நாங்கள் தீர்மானித்துள்ளோம்.”
கேம்பிரிட்ஜ் (Cambridge) மற்றும் ஒக்ஸ்போர்ட் (Oxford) ஆகிய இரு சங்கங்களின் அழைப்பின் பேரில் நாமல் ராஜபக்ச தற்போது ஐக்கிய இராச்சியத்தில் தங்கியுள்ளார்.
எவ்வாறாயினும், தமிழ் புலம்பெயர் அமைப்புகளின் கடும் எதிர்ப்பு காரணமாகவே இந்த விசேட விரிவுரைகள் தாமதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



