News

இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை; எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் – பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாராச்சி

இலங்கையில் தற்போது எரிவாயு தட்டுப்பாடோ அல்லது நெருக்கடியோ இல்லை என்றும், மக்களை திசைதிருப்புவதற்காக எதிர்க்கட்சிகளினால் வாராந்தம் உருவாக்கப்படும் “பூச்சாண்டி” கதைகளுக்குள் எரிவாயு பிரச்சினையையும் அவர்கள் சேர்த்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாராச்சி.

தனியார் எரிவாயு நிறுவனமான Laugfs (லாப்ஸ்) நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு உரிய முறையில் விநியோகத்தை வழங்காததால் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள்:

• லிட்ரோ (Litro) விநியோகம் அதிகரிப்பு: தனியார் நிறுவனம் தனது பொறுப்பைத் தவறியதால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களைக் கருத்திற்கொண்டு, அரசாங்கத்திற்குச் சொந்தமான லிட்ரோ எரிவாயு நிறுவனம் தனது தினசரி விநியோகத்தை 1,500 மெட்ரிக் தொன் வரை அதிகரித்துள்ளது.

• சந்தைக்கு ஒரு இலட்சம் சிலிண்டர்கள்: கடந்த திங்கட்கிழமை மாத்திரம் ஒரு இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விடுவிக்குமாறு வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க அறிவுறுத்தியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

• நிறுவன அதிகாரிகளுக்கு அழைப்பு: லாப்ஸ் நிறுவனம் பொறுப்பற்ற முறையில் செயற்படுவதை அரசாங்கம் அவதானித்துள்ளதால், அடுத்த வாரம் வர்த்தக அமைச்சர் அந்த நிறுவன அதிகாரிகளை அழைக்கவுள்ளார்.

சட்ட ரீதியான சிக்கல்கள்:

மஞ்சள் நிற சிலிண்டர்களை (லாப்ஸ்) பெற்றுக்கொண்டு நீல நிற சிலிண்டர்களை (லிட்ரோ) விநியோகிப்பதற்கு லிட்ரோ நிறுவனத்திற்கு சட்ட ரீதியான உரிமை இல்லை என்றும், அது ஒப்பந்தங்களை மீறும் செயல் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது விளக்கமளித்தார்.

ஒருவேளை லாப்ஸ் நிறுவனத்தினால் தொடர்ந்து விநியோகிக்க முடியாவிட்டால், அவர்கள் தமது வாடிக்கையாளர்களுக்கு உரிய நட்டஈட்டை வழங்கி, வேறொரு நிறுவனத்தின் வாடிக்கையாளராக மாறுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.”

மக்களுக்கான கோரிக்கை:

எதிர்க்கட்சிகள் சமூக ஊடகங்கள் மற்றும் தமக்கு நெருக்கமான ஊடகங்கள் ஊடாக எரிவாயு தட்டுப்பாடு குறித்த அடிப்படையற்ற அச்சத்தை மக்கள் மத்தியில் உருவாக்க முயற்சிப்பதாக அவர் கூறினார். அரசாங்கம் என்ற ரீதியில் மக்களின் அன்றாட வாழ்க்கை சீர்குலைய இடமளிக்கப் போவதில்லை என்றும், எதிர்க்கட்சிகளின் சேறு பூசும் பிரச்சாரங்களுக்கு ஏமாறாமல் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்குமாறும் சந்தன சூரியாராச்சி மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

Recent Articles

Back to top button