“இவ்வளவு தரம் குறைந்த நிலக்கரி ஒருபோதும் கொண்டுவரப்படவில்லை – இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம்”

லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்காக அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற நிலக்கரி கையிருப்பினால் இலங்கை மின்சார சபைக்கும் நுகர்வோருக்கும் பில்லியன் கணக்கான ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் (CEBEU) தெரிவித்துள்ளது.
இந்த நட்டத்திற்கு பொறுப்பான தரப்பினரை உடனடியாக அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அந்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.
விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த சங்கம்,
லக்விஜய மின் உற்பத்தி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்று வரை பல்வேறு நிறுவனங்கள் ஊடாக நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ள போதிலும், இவ்வளவு தரம் குறைந்த நிலக்கரி கையிருப்பு இதற்கு முன்னர் பதிவாகவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டின் வருடாந்த மின்சாரத் தேவையில் 40% அளவை பூர்த்தி செய்யும் லக்விஜய மின் உற்பத்தி நிலையமானது, மின் கட்டமைப்பில் உள்ள குறைந்த செலவிலான வெப்ப மின் உற்பத்தி நிலையமாகும். எனவே, அங்கு இடம்பெறும் இவ்வாறான முறைகேடுகள் நுகர்வோரின் மின்சாரக் கட்டணத்தில் நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
இந்த நட்டத்தைக் கணக்கிடுவதை அமைச்சின் உட்புறக் குழுவொன்றிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தக் கூடாது எனவும், அதற்காக வெளிப்படைத்தன்மையுடன் கூடிய சரியான தொழில்நுட்ப மதிப்பீடு அவசியம் எனவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த முறைகேடுகளின் உண்மையை வெளிப்படுத்த முன்வரும் மின் உற்பத்தி நிலைய ஊழியர்களுக்கோ அல்லது பொறியியலாளர் சங்க உறுப்பினர்களுக்கோ எந்தவிதமான அழுத்தங்களும் பிரயோகிக்கப்படக் கூடாது. அவ்வாறான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டால் அதற்கு எதிராக கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக சங்கம் எச்சரித்துள்ளது.
இந்த நிலைமையை மிகவும் பாரதூரமான தொழில்சார் பிரச்சினையாக அவதானிப்பதாகத் தெரிவித்துள்ள மின்சார சபை பொறியியலாளர் சங்கம், பொதுப் பணம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுக்க அதிகாரிகள் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.



