News

இலங்கை கிரிக்கெட் அணியைச் சுற்றி வளர்ந்து வரும் நெகடிவ் கலாசாரத்திற்கு தீர்வு காண அரசாங்கம் தலையிட வேண்டும்  என கேப்டன் தசுன் ஷானக்க கோரிக்கை

ஸ்ரீலங்கா அணித் தலைவர் தசுன் ஷானக, தேசிய கிரிக்கெட் அணியைச் சுற்றி வளர்ந்து வரும் நெகடிவ் கலாசாரத்திற்கு தீர்வு காண அரசாங்கம் தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இது வீரர்களின் மனநலம் மற்றும் விளையாட்டின் எதிர்காலத்தைப் பாதிப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.


இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் இருந்து இலங்கை அணி வெளியேறிய பின்னர் உரையாற்றிய ஷானக, தோல்விக்கான பொறுப்பை அணி ஏற்றுக்கொண்டாலும், வெளியில் இருந்து வரும் விமர்சன அலை ஒரு தீங்கு விளைவிக்கும் சூழலை உருவாக்கியுள்ளதாகக் கூறினார்.


“உண்மையில், இந்த உலகக் கிண்ணத்தைப் பார்க்கும்போது, பேடி அப்டன் எங்களுடன் பணியாற்றினார், அவரிடமிருந்து எங்களுக்குப் பெரிய ஆதரவு கிடைத்தது. 

வீரர்களாகிய எங்களுக்கு வெளியே இருந்து வரும் சத்தங்களைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்,” என்று ஷானக தெரிவித்தார்.


ஆடை மாற்றும் அறைக்குள் பாசிட்டிவ் ஆக இருக்க முயற்சி செய்த போதிலும், பொதுவெளியிலும் சமூக ஊடகங்களிலும் பரவும் விமர்சனங்களுக்கு வீரர்கள் தொடர்ந்து ஆளாகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.


“நாங்கள் முக்கியமாக நெகடிவ் விடயங்களையே கேட்கிறோம். வீரர்களாகிய நாங்கள் எவ்வளவு பாசிடிவ் ஆக இருந்தாலும், வெளியில் இருந்து ஒரு நெகடிவ் சூழல் உருவாக்கப்படுகிறது.

இது இலங்கையில் கிரிக்கெட்டுக்கு ஒரு பாதகமான நிலையாகும்,” என்றார்.


அணிக்கு எதிராக முன்வைக்கப்படும் பொது விமர்சன கலாசாரம் குறித்து ஷானக கேள்வி எழுப்பினார்.


“எங்களிடம் இந்த ஒரு விளையாட்டு மட்டுமே உள்ளது, இதை காப்பாற்ற முடியும் என்று நான் நினைக்கவில்லை. நீங்கள் வெளியே சென்றால், விமர்சிப்பதற்காக எத்தனை பேர் மைக்குகளைப் பிடித்துக் கொண்டு நிற்கிறார்கள் என்பதை நீங்களே காண்பீர்கள். பிறகு ஏன் இப்படி நெகடிவ் கருத்துக்கள் பரப்பப்படுகின்றன?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.


உலகக் கிண்ணத் தோல்விக்கான காரணங்களை அணி புரிந்து கொண்டுள்ளதாகவும், பொதுமக்களின் கவலைகளைப் பகிர்ந்து கொள்வதாகவும் தெரிவித்த அவர், தொடர்ச்சியான நேகடிவ் தன்மை கட்டமைப்பு ரீதியான சிக்கல்களைத் தீர்க்க உதவாது என்றார்.


“சரி, நாங்கள் ஒரு உலகக் கிண்ணத்தில் தோற்றுவிட்டோம்; அதற்கான காரணங்கள் எங்களுக்குத் தெரியும். எமக்கும் கவலைகள் உள்ளன. ஆனால் பிரச்சினைகளைச் சரி செய்வதை விட நெகடிவ் விடயங்களே முன்னுக்கு வந்துள்ளன,” என்றார்.


பொதுமக்களின் விரோதப் போக்கினால் ஏற்படும் உளவியல் பாதிப்பிலிருந்து இளம் வீரர்களைப் பாதுகாக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று ஷானக வேண்டுகோள் விடுத்தார்.


“குறைந்தபட்சம் அடுத்து வரும் வீரர்களுக்காவது, அரசாங்கம் இதில் தலையிட்டு இவற்றை நிறுத்தினால், அது சிறந்த மனநலத்திற்கு பெரிய உதவியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button