News

அரசாங்கம் தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்தி பாரிய சேதங்களை ஏற்படுத்தி உள்ளதால், மின்சார பாவனையாளர்களை பாதுகாக்க எமது ஐக்கிய மக்கள் சக்தி முன் நிற்கும் என சஜித் அறிவிப்பு

அரசாங்கம் தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்வது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடும் கவலை வெளியிட்டுள்ளதுடன், இதன் காரணமாக மின்சார உற்பத்தி வினைத்திறனற்றதாக மாறியுள்ளதோடு, உபகரணங்கள் சேதமடைதல் அதிகரித்துள்ளதாகவும், நாட்டுக்கும் மக்களுக்கும் பாரிய நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.

எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எமது நாட்டுக்கு தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவது குறித்த தகவல்களை வெளிப்படுத்தியதையடுத்து, அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த தரப்பினர் தற்போது இந்த நிலக்கரி தரம் குறைந்தவை என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளதாக பிரேமதாச வீடியோ செய்தி ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலக்கரியைப் பயன்படுத்துவதால் மின்சார உற்பத்தி வினைத்திறனற்றதாக மாறியுள்ளதுடன், உபகரணங்கள் சேதமடையும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உற்பத்தியாகும் சாம்பலின் அளவு 11-15% என்ற மட்டத்திலிருந்து 21% க்கும் அதிகமாக இருமடங்காக அதிகரித்துள்ளது. இந்தச் சாம்பலை அகற்றுவது கூட சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த 2-3 மாதங்களுக்குள் மேலும் 15-16 நிலக்கரி கப்பல்கள் வரவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். உயர்தர நிலக்கரி இறக்குமதி செய்யப்படாமல், தரமற்ற நிலக்கரி பயன்படுத்தப்படுவதால் மெகாவாட் உற்பத்தி குறைந்துள்ளது.

இந்தக் குறையை நிவர்த்தி செய்ய, எரிபொருள் மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட வேண்டியுள்ளதால், நாட்டுக்கும், அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் மற்றும் மின்சார நுகர்வோருக்கும் நிதி இழப்பு ஏற்படுவதாக அவர் கூறியுள்ளார்.

2009 ஆம் ஆண்டின் மின்சாரச் சட்டத்தின் 30 ஆம் பிரிவின் கீழ், வினைத்திறனான மின்சார உற்பத்தியின் மூலமே நுகர்வோரிடமிருந்து கட்டணங்களை வசூலிக்க முடியும் என்பதை பிரேமதாச வலியுறுத்தினார். எனவே, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்.

தரமற்ற நிலக்கரியினால் ஏற்படும் வினைத்திறனற்ற உற்பத்தியால் ஏற்படும் பாரிய நிதி இழப்பை நாட்டின் 7.5 மில்லியன் மின்சார நுகர்வோரிடமிருந்து அறவிட முடியாது என அவர் வலியுறுத்தினார்.

அரசாங்கத்தின் “முறைமை மாற்றம்” (change in system) என்பது உண்மையில் தரமற்ற நிலக்கரியிலேயே முடிந்துள்ளதாக பிரேமதாச சுட்டிக்காட்டினார். தரமற்ற நிலக்கரியால் ஏற்படும் இழப்புகளை நுகர்வோர் மீது சுமத்துவது சட்டவிரோதமானது. மாற்றத்தை உறுதியளித்த அரசாங்கம் இப்போது ஊழல் நிறைந்த, தரமற்ற நிலக்கரி ஒப்பந்தங்களைக் கொண்டு வந்து, நாட்டையும் மக்களையும் கைவிட்டுள்ளது. இந்த ஊழல் நிறைந்த செயல்முறையினால் இழந்த பணத்தைக் கொண்டு பாடசாலைகள், வைத்தியசாலைகளைக் கட்டியிருக்கலாம், ஏழைகளுக்கு நிவாரணம் வழங்கியிருக்கலாம் அல்லது புதிய தொழில்களைத் தொடங்கியிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

தேவைப்படுவது நிபுணர் குழு அல்ல, மாறாக இந்த ஊழல் கொடுக்கல் வாங்கல்களை விசாரணை செய்ய ஒரு தடயவியல் தணிக்கையே (forensic audit) என எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.

மின்சார நுகர்வோரைப் பாதுகாக்க ஐக்கிய மக்கள் சக்தி முன்நிற்பதாகவும், தேசிய சொத்தான நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் தரமற்ற நிலக்கரியைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சேதங்களுக்கு ஜனாதிபதியும் அமைச்சரவையும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button