News

அமெரிக்க இராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் !

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானுக்கு எதிராக ஒரு பாரிய கூட்டு இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதனை ஒரு “முக்கிய போர் நடவடிக்கை” என விவரித்துள்ளதுடன், ஈரானிய மக்கள் அந்நாட்டு ஆட்சி அதிகாரத்தை மாற்றுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

“ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்” (Operation Midnight Hammer) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நடவடிக்கையின் மூலம் ஈரானின் போர்டோ (Fordow), நட்டான்ஸ் (Natanz) மற்றும் இஸ்பஹான் (Isfahan) ஆகிய பகுதிகளில் உள்ள அணுசக்தி நிலையங்களை இலக்கு வைத்துள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அத்துடன், தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஈரானிய உயர்மட்டத் தலைவரின் அலுவலகம் மற்றும் அதிபர் அலுவலகம் ஆகியவையும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதல்களையடுத்து ஈரான் முழுவதும் இணையச் சேவைகள் முற்றாக முடங்கியுள்ளன.

இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீது இந்த ஏவுகணைகள் பாய்ந்துள்ளன. பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் 5-வது படைப்பிரிவின் தலைமையகமும் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் விழுந்த ஏவுகணைத் துண்டுகள் காரணமாக ஆசிய நாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

பிரித்தானிய அரசாங்கம் இந்தத் தாக்குதலில் தாம் ஈடுபடவில்லை என்றும், மத்திய கிழக்கில் ஒரு பாரிய போர் வெடிப்பதை தாம் விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், ஓமான், கத்தார் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் ஈரானைத் தாக்க வேண்டாம் என்று ஏற்கனவே டிரம்ப் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தன.

தற்போதைய பாதுகாப்பற்ற சூழ்நிலை காரணமாக வளைகுடா பிராந்தியத்தின் வான்வழியாகச் செல்லும் விமானங்கள் மாற்றுப் பாதைகளுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிராக தாம் “கடுமையான பதிலடி” கொடுப்போம் என ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் அறிவித்துள்ளது.

Recent Articles

Back to top button