அஹ்மதி நிஜாத்தின் படுகொலை குறித்துக் கேள்விப்பட்டு நான் அதிர்ச்சியடைந்தேன் – இந்த இக்கட்டான நேரத்தில் நாங்கள் ஈரான் மக்களுடன் நிற்கிறோம் – ஈரான் இலங்கையின் உற்ற நண்பன் ; நாமல் தெரிவிப்பு

விமானத் தாக்குதலில் ஈரானின் முன்னாள் அதிபர் மஹ்மூத் அஹ்மதிநிஜாத் படுகொலை செய்யப்பட்டதாக வெளியான செய்திகள் அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அவரை இலங்கையின் நெருங்கிய நண்பர் என வர்ணித்துள்ளார்.
அஹ்மதி நிஜாத்தின் படுகொலை குறித்துக் கேள்விப்பட்டு தான் “அதிர்ச்சியடைந்ததாக” விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ராஜபக்ஷ, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் முன்னாள் ஈரானியத் தலைவரின் பங்களிப்பை நினைவு கூர்ந்துள்ளார்.
முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் 2008 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அஹ்மதிநிஜாத், சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்துதல் மற்றும் உமா ஓயா பலநோக்கு அபிவிருத்தித் திட்டம் உள்ளிட்ட பல முக்கிய அபிவிருத்தித் திட்டங்களைத் தொடங்குவதற்கு உந்துசக்தியாக இருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
ஈரான் எப்போதும் இலங்கையின் உண்மையான நண்பனாக இருந்து வருவதாகக் குறிப்பிட்ட ராஜபக்ஷ, விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் அனைவரது குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
“இந்த இக்கட்டான நேரத்தில் நாங்கள் ஈரான் மக்களுடன் நிற்கிறோம். அனைத்துத் தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறும், போர் வழியைத் தேர்ந்தெடுக்காமல் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர் கூறினார்.



