News

இன்று காலை தாக்குதலுக்குள்ளான ஈரான் போர் கப்பல் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகின..

இலங்கைக் கடற்பரப்புக்கு வெளியே ஈரானியக் கப்பலொன்று மீதான நீர்மூழ்கித் தாக்குதலொன்றில் குறைந்தது 101 பேரைக் காணவில்லையெனவும், ஒருவர் உயிரிழந்ததுடன், 78 பேரைக் காணவில்லையென இலங்கைக் கடற்படை, பாதுகாப்பு அமைச்சின் தகவல் மூலங்கள் தெரிவித்ததாக றொய்ட்டர்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் விசாகப்பட்டிணத்தில் இந்திய கடற்படை ஏற்பாடு செய்திருந்த “இண்டர்னெஷமல் ப்ளீட் ரிவீவ் 2026” நிகழ்வில் கலந்துகொண்டு நாடு திரும்பிய கப்பல் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேருக்கு காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், விசேட நிபுணர் வைத்தியர் எஸ்.டி.யு.எம். ரங்க இது குறித்து தெரிவிக்கையில்,

“இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் 7 பேர் நடுத்தர அளவிலான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். ஏனையோருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.

அத்துடன் காயமடைந்தவர்கள் தீக்காயங்கள், வெட்டுக்காயங்கள் மற்றும் எலும்பு முறிவுகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த காயங்கள் எதனால் ஏற்பட்டன என்பதை தற்போதைய நிலையில் உறுதிப்படுத்த முடியாது” என அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று (04) காலை 5:08 மணியளவில் கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பினைத் தொடர்ந்து, இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து பாரிய கூட்டு மீட்பு நடவடிக்கையை ஆரம்பித்தன.

குறித்த கப்பலில் சுமார் 180 பேர் இருந்ததாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எஞ்சியிருக்கும் வீரர்களை மீட்பதற்காக மேலதிக கடற்படைக் கப்பல்கள் அந்த பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

இலங்கையின் தெற்கு கடற்கரையில் மூழ்கிய ஈரானிய போர்க்கப்பல், இலங்கை கடல் எல்லைக்கு வெளியே இருந்தபோது வெளிநாட்டு நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

இது குறித்த மேலதிக விசாரணைகள் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. R

Recent Articles

Back to top button