News

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் இருக்கும் ஈரானியக் கப்பல் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை உடனடியாக அறிவிக்க வேண்டும் ..

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) இருப்பதாகக் கூறப்படும் மற்றுமொரு ஈரானியக் கப்பல் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை உடனடியாகத் தெளிவுபடுத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

X தளத்தில் பதிவொன்றை மேற்கொண்டுள்ள ராஜபக்ஷ, குறித்த கப்பல் தற்போது பிரத்தியேக பொருளாதார வலயத்தில் இருப்பதாகவும், துறைமுகத்திற்குள் நுழைவதற்கு அரசாங்கத்தின் அனுமதியை எதிர்பார்த்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் தனது நிலைப்பாடு என்ன என்பதை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும். அதிகாரிகளால் ஒரு முடிவை எடுக்க முடியாவிட்டால், 1971 ஆம் ஆண்டு பங்களாதேஷ் விடுதலைப் போரின் போது முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவினால் உருவாக்கப்பட்ட முன்னுதாரணத்தைப் பின்பற்ற வேண்டும்” என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மோதல்களின் போது, திருமதி பண்டாரநாயக்க நடுநிலைக் கொள்கையைக் கடைப்பிடித்ததுடன், இந்தியா தனது வான்பரப்பை பாகிஸ்தான் விமானங்களுக்காக மூடிய பின்னர், பாகிஸ்தான் விமானங்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்கு அனுமதி வழங்கியதையும் ராஜபக்ஷ இதன்போது நினைவு கூர்ந்துள்ளார்.

அந்த நேரத்தில் திருமதி பண்டாரநாயக்க மனிதாபிமான அடிப்படையிலும், தேவையையும் நட்பையும் கருத்திற் கொண்டே அந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Recent Articles

Back to top button