போர்களில் பொதுமக்கள் எவரும் உயிரிழக்கக் கூடாது – ஒவ்வொரு உயிரும் தன் உயிரைப் போலவே விலைமதிப்பற்றது – கடுமையான உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயமும் உள்ளது

போர்களில் பொதுமக்கள் எவரும் உயிரிழக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ள இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, ஒவ்வொரு உயிரும் தன் உயிரைப் போலவே விலைமதிப்பற்றது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
“மனிதாபிமான விழுமியங்களுக்கும் உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் எமது முதலிடத்தை வழங்குவதை உறுதிப்படுத்தும் அதேவேளையில், எமது அணிசேரா கொள்கையை நாம் மிகவும் கவனமாகப் பாதுகாப்போம்,” என்று ஜனாதிபதி ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அமைதிக்கான அவசரத் தேவையைச் சுட்டிக்காட்டிய அவர், உலகம் முழுவதும் உள்ள சமூகங்கள் பாரிய மற்றும் சிக்கலான சவால்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், கடுமையான உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம் குறித்து எச்சரித்துள்ளார்.
“அமைதிக்கான உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துமாறு அனைத்து தரப்பினரையும் நாம் கேட்டுக்கொள்கிறோம். ஒரு நாடு என்ற ரீதியில், மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஆதரவளிக்க இலங்கை தயாராக உள்ளது. எமது அனைத்து நடவடிக்கைகளும் உயிர்களைக் காப்பாற்றுவதையும் மனிதாபிமானம் மேலோங்குவதை உறுதி செய்வதையுமே நோக்கமாகக் கொண்டுள்ளன,” என்று ஜனாதிபதி திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தெற்கு கடற்பரப்பிற்கு அப்பால் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலினால் தாக்கப்பட்ட ஈரான் நாட்டுக்குச் சொந்தமான IRIS Dena கப்பலில் இருந்தவர்களின் உயிர்களைக் காப்பாற்ற இலங்கை உதவியதையடுத்து, மற்றுமொரு ஈரானிய கப்பலான IRIS Bushehr திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு உதவி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து அவரது இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.



