News

இலங்கை மின்சார சபை இன்றுடன் நிறைவு.. இன்று முதல் ஆறு நிறுவனங்களின் கீழ்!

இதுவரை நடைமுறையிலிருந்த இலங்கை மின்சார சபை இன்று நள்ளிரவுடன் உத்தியோகபூர்வமாக கலைக்கப்படுவதுடன், நாளை (10) முதல் அதன் அனைத்து நடவடிக்கைகளும் புதிதாக நிறுவப்பட்ட ஆறு நிறுவனங்களின் கீழ் ஒப்படைக்கப்படும்.

இந்தத் தீர்மானத்துடன், சபையில் பணியாற்றிய சுமார் 20,000 ஊழியர்களை இந்த புதிய நிறுவனங்களுக்கு உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் நான்கு கட்டங்களாக வழங்கப்பட்ட சம்பள மறுசீரமைப்பினால் ஏற்பட்ட சிக்கல்களைத் தீர்க்கும் வகையில், ஊழியர்களுக்கு 10%, 5% மற்றும் 7% என சம்பள அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சலுகையானது 2026 ஜனவரி 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், நிலுவைச் சம்பளத்துடன் வழங்கப்படும் என நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

நிறுவப்பட்ட புதிய நிறுவனங்களில் மூன்றிற்கு கடந்த 6 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பிரதம நிறைவேற்று அதிகாரிகள் (CEO) நியமிக்கப்பட்டுள்ளனர்.

மின்சார சபை கலைக்கப்படும் சட்டப்பூர்வமான செயல்முறையுடன், அந்த நிறுவனத்தில் தற்போது செயற்படும் சுமார் 40 தொழிற்சங்கங்களின் பதிவுகளும் இன்று நள்ளிரவுக்குப் பின்னர் ரத்தாகும்.

இலங்கை மின்சார சபையானது 1969 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் திகதி, 1969 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க இலங்கை மின்சார சபைச் சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டது.

மின்சார சபை நிறுவப்படுவதற்கு முன்னர், இலங்கையின் மின்சார நடவடிக்கைகள் அரசாங்க மின்சாரத் திணைக்களத்தினால் (Department of Government Electrical Undertakings – DGEU) முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Back to top button