News

“அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளைப் பயன்படுத்துங்கள்.. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்..”

கடந்த சில நாட்களாக பொதுமக்கள் மத்தியில் நிலவிய அச்சம் காரணமாக, தேவையற்ற முறையில் எரிபொருளைச் சேமித்ததால், குறைந்த விலையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்த எரிபொருள் இருப்புக்கள் திட்டமிட்ட காலத்திற்கு முன்னரே தீர்ந்துவிட்டதாகவும், இதன் காரணமாக எரிபொருள் விலை திருத்தத்தை முன்கூட்டியே மேற்கொள்ள நேரிட்டதாகவும் இலங்கை கனிப்பொருள் கூட்டுத்தாபனத்தின் தலைவர் D.J.A.S.D. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

சாதாரண நுகர்வு அளவைத் தாண்டி, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பொதுமக்கள் 59,200 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 47,500 மெட்ரிக் தொன் ஒக்டேன் 92 ரக பெற்றோலை கொள்வனவு செய்துள்ளதாகத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது சாதாரணமாக ஒன்றரை அல்லது இரண்டு கப்பல்களில் கொண்டுவரப்படும் எரிபொருள் அளவு என்றும், மாத நடுப்பகுதி வரை பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த இந்த இருப்புக்கள் பொதுமக்களால் முன்கூட்டியே வாங்கப்பட்டதால், குறைந்த விலையில் பெறப்பட்ட இருப்புக்கள் தீர்ந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“பொதுமக்கள் பதற்றமடைந்து எரிபொருள் வரிசைகளில் நின்று இவ்வாறு இருப்புக்களைச் சேமிக்காமல் இருந்திருந்தால், இந்த விலை திருத்தத்தை இம்மாத இறுதி வரை தள்ளிப்போட்டிருக்க முடியும்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

உலக சந்தையில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை சுமார் 100 டொலர்களினால் அதிகரித்துள்ளதாகவும், இது எவராலும் எதிர்வு கூற முடியாத ஒரு அசாதாரண சூழ்நிலை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தற்போது நாட்டிற்கு வரும் எரிபொருள் கப்பல்களுக்கான கொடுப்பனவுகள், அவை இறக்கப்படும் போது நிலவும் ஐந்து நாட்களுக்கான உலக சந்தை சராசரி விலையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதால், புதிதாக விநியோகிக்கப்படும் எரிபொருளின் செலவு அதிகமாக உள்ளதாகவும் அவர் வெளிப்படுத்தினார்.

நாட்டில் உள்ள எரிபொருள் சேமிப்பு வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டதாக இருப்பதாலும், இதற்காக பெருமளவு வெளிநாட்டு செலாவணி செலவிடப்படுவதாலும், தற்போதைய நெருக்கடி நிலை சீராகும் வரை அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளைப் பயன்படுத்துமாறும், தேவையற்ற பயணங்களைக் குறைத்துக் கொள்ளுமாறும் தலைவர் பொதுமக்களிடம் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Recent Articles

Back to top button