“நாங்கள் வென்றுவிட்டோம்” என அறிவித்து ஈரானியப் போரிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு ட்ரம்பிற்கு ஆலோசகர்கள் அறிவுறுத்தல் – ராய்ட்டர்ஸ்

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவது மற்றும் வெற்றியை அறிவிக்க வேண்டிய நேரம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் நெருங்கிய ஆலோசகர்களுக்கு இடையே தற்போது கடுமையான கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
2003 ஈராக் போருக்குப் பிறகு அமெரிக்கா முன்னெடுத்துள்ள மிகப்பெரிய இராணுவ நடவடிக்கை இதுவாகும். மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் மோதல்கள் பரவி வரும் பின்னணியில், ட்ரம்ப் நிர்வாகத்திற்குள் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் போர் காரணமாக சர்வதேச எண்ணெய் சந்தை பாதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகையின் பொருளாதாரக் குழுவும், கருவூல அதிகாரிகளும் சுட்டிக்காட்டுகின்றனர். எரிபொருள் விலை வேகமாக அதிகரிப்பது அதிபருக்கு உள்ள அரசியல் ஆதரவு சரிவதற்கு காரணமாக அமையலாம் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக, அடுத்த நவம்பர் மாதம் நடைபெறவுள்ள காங்கிரஸ் இடைத்தேர்தலை இலக்காகக் கொண்டு, அதிபரின் அரசியல் ஆலோசகர்களான சூசி வைல்ஸ் மற்றும் ஜேம்ஸ் பிளேயர் ஆகியோர் போரின் நோக்கங்களைக் கட்டுப்படுத்தி, உடனடியாக வெற்றியை அறிவிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்துவதற்காக போரை விரைவாக முடிவுக்குக் கொண்டு வருமாறு வெள்ளை மாளிகையினுள் உள்ள சந்தை மற்றும் அரசியல் குழுக்கள் அழுத்தம் கொடுக்கின்றன. அதேவேளை, செனட்டர் லிண்ட்சே கிரஹாம் மற்றும் டாம் காட்டன் உள்ளிட்ட குழுவினர், ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதைத் தடுக்க இராணுவ அழுத்தத்தைத் தொடர்ந்து பேண வேண்டும் என்று வாதிடுகின்றனர். ஸ்டீவ் பன்னன் மற்றும் டக்கர் கார்ல்சன் போன்றோர், அமெரிக்கா மீண்டும் ஒரு நீண்டகால மத்திய கிழக்கு போரில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்குமாறு அதிபரைக் கேட்டுக்கொள்கின்றனர்.
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கையின் மூலம் ஈரானின் கடற்படை மற்றும் ஏவுகணைத் தளங்களுக்கு அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்கள் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. இருப்பினும், ஈரான் இன்னும் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தும், அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியும் எதிர்ப்பைக் காட்டி வருகிறது.
தெஹ்ரான் நிர்வாகம் வீழ்ச்சியடையும் நிலையில் இல்லை என்று அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவ்வாறான சூழ்நிலையில், அதிபர் ட்ரம்ப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ‘வரையறுக்கப்பட்ட நடவடிக்கை’ போன்ற சொற்களைப் பயன்படுத்தி தனது நிலைப்பாட்டை மாற்ற முயற்சித்து வருகிறார்.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்த நடவடிக்கையைப் போன்று ஈரானைத் தோற்கடிப்பது எளிதல்ல என்றும், இது நீண்ட மற்றும் அதிக செலவு மிக்க நடவடிக்கையாக அமையலாம் என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.



