இன்னும் குறைந்தது மூன்று வாரங்களுக்கு ஈரான் மீதான தாக்குதல் நடவடிக்கையை தொடர்வோம் என இஸ்ரேல் அறிவித்தது

ஈரான் மீதான தாக்குதல் நடவடிக்கையை இன்னும் குறைந்தது மூன்று வாரங்களுக்குத் தொடர இஸ்ரேலிய ராணுவம் திட்டமிட்டுள்ளதாகவும், இன்னும் ஆயிரக்கணக்கான இலக்குகள் மீதமுள்ளதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் (IDF) செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
(CNN) ஊடகத்திடம் பேசிய ஐடிஎஃப் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் எஃபி டெஃப்ரின், அமெரிக்கக் கூட்டாளிகளுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளைத் தொடர ராணுவம் தயாராக இருப்பதாகக் கூறினார்.
“எங்களுக்கு முன்னால் ஆயிரக்கணக்கான இலக்குகள் உள்ளன,” என்று கூறிய டெஃப்ரின், இப்போது முதல் சுமார் மூன்று வாரங்களில் வரவிருக்கும் யூத பண்டிகையான பாசோவர் (Passover) வரை இஸ்ரேலிய ராணுவம் தனது செயல்பாடுகளுக்கான திட்டங்களை வைத்துள்ளதாகவும், அந்த காலக்கட்டத்திற்கு அப்பாலும் கூடுதல் திட்டங்கள் இருப்பதாகவும் சேர்த்துக் கூறினார்.
IDF தகவலின்படி, பிப்ரவரி 28 அன்று இந்த நடவடிக்கை தொடங்கியதில் இருந்து, இஸ்ரேலிய விமானப்படை மேற்கு மற்றும் மத்திய ஈரானில் சுமார் 400 கட்டங்களாக வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாம்.
இந்தத் தாக்குதல்கள் ஈரானின் ஏவுகணை, பாதுகாப்பு மற்றும் உற்பத்திப் பிரிவுகளுடன் தொடர்புடைய உள்கட்டமைப்புகளை அழிப்பதிலும், பணியாளர்களை இலக்கு வைப்பதிலும் கவனம் செலுத்தியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.



