News

ரணில் விக்ரமசிங்க 2002 காலப்பகுதியில் திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை புனரமைத்து அபிவிருத்தி செய்யப் பார்த்த போதும், 2015 காலப்பகுதியில் முயற்சித்த போதும், 2024 காலப்பகுதியில் எடுத்த முயற்சிகளையும் ஜே.வீ.பியினரே தடுத்தனர் ; வஜிர

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை புனரமைத்து அபிவிருத்தி செய்வதற்கு ரணில் விக்ரமசிங்க மூன்று சந்தர்ப்பங்களில் எடுத்த முயற்சிகளை மக்கள் விடுதலை முன்னணி சீர்குலைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வஜிர அபேவர்தன தனது உரையில் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலங்களில் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளை வரிசைப்படுத்தினார்:

2002-2004 காலப்பகுதியில் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் இந்தத் தாங்கிகளை புனரமைக்க நடவடிக்கை எடுத்தபோது, ஜே.வி.பி நாடு முழுவதும் போலி அச்சத்தை ஏற்படுத்தி அந்தப் பணிகளை முடக்கியது.

2015-2020 காலப்பகுதியில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க, இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்தத் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய முயன்றார். அப்போதும் ஜே.வி.பியின் அழுத்தங்களால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

2022-2024 காலப்பகுதியில் ஜனாதிபதியாக இருந்தபோது அவர் எடுத்த முயற்சியும் ஜே.வி.பியின் எதிர்ப்புப் போராட்டங்களினால் தோல்வியடைந்தது.

இந்த மூன்று சந்தர்ப்பங்களில் ஒன்றிலாவது இந்தத் தாங்கிகள் அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தால், தற்போது ஏற்பட்டுள்ள உலகளாவிய நெருக்கடியின் போது இலங்கைக்குத் தேவையான எரிபொருளைச் சேமித்து வைத்திருக்க முடிந்திருக்கும் என வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டினார்.

இந்தத் தாங்கிகளின் உரிமை யாரிடம் இருந்தாலும், அவசர காலங்களில் அதில் சேமிக்கப்படும் எரிபொருள் இலங்கையர்களுக்கே சொந்தமாகும்.

அந்தத் தாங்கிகளைப் பயன்படுத்தியிருந்தால் இன்றைய நெருக்கடியை மிக இலகுவாகக் கையாண்டிருக்கலாம். இந்த மூன்று பொன்னான வாய்ப்புகளையும் சீர்குலைத்த ஜே.வி.பிக்கு இன்று அதன் கர்மவினை பலித்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button